×

தமிழ்நாட்டின் மீது பற்றுபோல் போலி நாடகத்தை நடத்தும் பிரதமர் மோடி வைகோ ஆவேசம்

புவனகிரி, நவ. 22: தமிழ்நாட்டின் மீது பற்று இருப்பது போல் போலி நாடகத்தை பிரதமர் மோடி நடத்துக்கிறார் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜனவரி மாதம் சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள இருப்பதையொட்டி தொண்டர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி புதுச்சத்திரம் அருகே ஆணையம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று நேர்காணல் நடத்தி தொண்டர்களை தேர்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, பல இடங்களில் பள்ளி, கல்லூரிக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இதன் விளைவுதான் கோவையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை.

போதைப்பொருளை ஒழித்துக் கட்டுவதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்ததான் சமத்துவ நடை பயணத்தை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன். போதைப்பொருள் வைத்திருந்தால் 10 ஆண்டு, பயன்படுத்தினால் குறைந்தபட்சம் 7 ஆண்டு என சட்டம் கொண்டு வர வலியுறுத்துகிறோம். இன்று பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதல்கள் ஏற்படுகிறது. சாதிப் பெயரால் பிரிவினை கூடாது என்பதை வலியுறுத்திதான் சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளேன். நல்லாட்சி நடத்துகின்ற திமுக தலைமையிலான ஆட்சி 2026க்கு பின்னரும் நீடிக்கும்.

ஒன்றிய அரசு படுமோசமாக தமிழகத்தை வஞ்சிக்கிறது. மதுரை, கோவையை விட ஜனத்தொகை குறைவாக உள்ள நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு அளித்த அறிக்கையை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். அவர்களால் இங்கு காலூன்ற முடியவில்லை என்பதற்காக எந்தெந்த விதத்தில் வஞ்சிக்க முடியுமோ அந்தந்த விதத்தில் வஞ்சிக்கிறது. இருக்கிற வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கவும், வெளியில் இருந்து வாக்காளர்களை இணைக்கவும் படுமோசமான மோசடியை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் மீது பற்று வைத்திருப்பதுபோல் போலி நாடகத்தை பிரதமர் மோடி நடத்தி கொண்டிருக்கிறார். அவரின் முகத்திரையை நாங்கள் மக்கள் மன்றத்தில் கிழித்தெறிவோம். என கூறினார்.

மல்லை சத்யா கட்சி துவங்கியது குறித்த கேள்விக்கு, இதுகுறித்து திருச்சியிலும், மதுரையிலும் விளக்கம் அளித்து விட்டேன். அதுகுறித்து எதுவும் பேசுவதற்கு இல்லை என கூறினார்.பேட்டியின்போது மதிமுகவின் மாநில பொருளாளர் செந்திலதிபன், மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் மணி, ஆடுதுறை முருகன், தொண்டர் படை தலைவர் பாஸ்கரசேதுபதி, தொண்டரணி தலைவர் ஜீவன், மாநில இளைஞரணி தலைவர் ஆசைத்தம்பி, கடலூர் மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், குணசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏஜிஎஸ் ரவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Modi Vigo ,Tamil Nadu ,Bhuvanagiri ,Modi ,secretary-general ,Vigo ,Prestigious General Secretary ,Wiko ,Equality Walk ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்