வேலூர், நவ.22: காட்பாடி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்த ஆட்டோ டிரைவருக்கு ரூ.12.48 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காட்பாடி அடுத்த திருவலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (40) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2014ம் ஆண்டு சர்க்கரை ஆலையில் இருந்து, அரிமுத்து மோட்டூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர் திசையில் வந்த டூவீலர் எதிர்பாராதவிதமாக ராஜேஷ் பைக் மீது மோதியது. இதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விபத்து காரணமாக அவருக்கு 20 சதவீதம் மாற்றுத்திறன் ஏற்பட்டது. இந்நிலையில் தான் மாற்றுத்திறனாளியானதற்கு இழப்பீடு வழங்கக் கோரி வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் ராஜேஷ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை குற்றவியல் நீதிபதி இசக்கியப்பன் விசாரித்தார். விசாரணையில் மனுதாரர் மாற்றுத்திறனாளியானதற்கு எதிரே வந்த பைக் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.12.48 லட்சமும், ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
