- சூரத் கிரிக்கெட் சங்கம்
- ஜனாதிபதி
- சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கம்
- கனைலால் ஒப்பந்ததாரர்
- குஜராத்
- சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கம்...
சூரத்: போலி ஆவணங்கள் மூலம் குடும்பச் சொத்தை அபகரித்து ரூ.2.92 கோடி மோசடி செய்த வழக்கில், சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவரான கனைலால் கான்ட்ராக்டர் (82) என்பவரின் தந்தை லால்பாய் கான்ட்ராக்டர் பெயரில்தான் அங்குள்ள கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. கனைலால் மற்றும் அவரது சகோதரர் ஹேமந்த்பாய் ஆகியோர் கூட்டாக கட்டுமான நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஹேமந்த்பாயின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி நயனாபென் கடந்த ஆண்டு போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், கனைலால் தனது கணவர் மற்றும் தனது கையெழுத்துக்களைப் போலியாகப் போட்டு, ஒரு போலி அதிகாரப் பத்திரத்தைத் தயாரித்ததாகவும், அதன் மூலம் நிறுவனத்தின் கூட்டுச் சொத்தை அபகரித்து, ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து ரூ.2.92 கோடி அடமானக் கடன் பெற்று, அந்தப் பணத்தைத் தனது சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். வாங்கிய கடனில் சுமார் ரூ.67 லட்சத்தைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், நிதி நிறுவனம் மற்ற பங்குதாரர்களான நயனாபென்னுக்கு நோட்டீஸ் அனுப்பியபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக கனைலால், சூரத் மாவட்ட நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி, அவர் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தினார். ஆனால், மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட போலி ஆவணங்களைத் திருப்பித் ஒப்படைக்கத் தவறியதால், அவருக்கு வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சூரத் குற்றப்பிரிவின் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கனைலால் கான்ட்ராக்டரைக் கைது செய்தனர். இந்த மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், மற்ற நிதிப் பரிவர்த்தனைகள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
