×

கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்; கைதான 3 வாலிபர்களுக்கு டிஎன்ஏ, ஆண்மை பரிசோதனை: சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது

கோவை: கோவையில் மாணவி கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய 3 பேருக்கு டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் கடந்த 2ம் தேதி இரவு மதுரையைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி 3 வாலிபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஒண்டிப்புதூரை சேர்ந்த தனது காதலருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஒரே மொபட்டில் வந்த அந்த 3 வாலிபர்கள் மாணவியின் ஆண் நண்பரை அரிவாளால் வெட்டி மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று கத்தி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் சகோதரர்கள் சதீஷ் என்கிற கருப்பசாமி(30), காளி என்கிற காளீஸ்வரன்(21), இவர்களது உறவினர் குணா என்கிற தவசி (20) ஆகியோர் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். அவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அப்போது கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகியோரிடம் நேரில் விசாரணை நடத்தி கடந்த 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

கால்களில் குண்டு அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 பேரும் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவியும், அவரது காதலனும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையானது ஜே.எம். 2 கோர்ட்டில் இருந்து கூடுதல் மகிளா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. நீதிபதி சிந்து வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்.இந்நிலையில், நேற்று கோவை அரசு மருத்துவமனையில் கைதான 3 பேருக்கும் தடயவியல் துறையினர் டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை செய்தனர். போலீசார் கூறுகையில், ‘‘3 பேருக்கும் டிஎன்ஏ மற்றும் ஆண்மை பரிசோதனை செய்ய கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரிகளின் முடிவுக்காக சென்னை தடயவியல் துறை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அதன் ரிசல்ட் கிடைத்துவிடும். இது இந்த வழக்கு விசாரணையில், முக்கிய ஆதாரமாக கருதப்படும்’’ என்றனர்.

அடையாள அணிவகுப்பு;
முன்னதாக, அடையாள அணிவகுப்பு நடத்த போலீசார் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், ஜே.எம். 1 நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்த அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கோவை மத்திய சிறையில் ஜே.எம். 1 நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. மத்திய சிறையில், ஒரு வழி கண்ணாடி வழியாக விதிமுறைகளின்படி அடையாள அணிவகுப்பு நடந்தது. அப்போது கூட்டு பாலியல் வழக்கில் கைதான 3 பேருடன் மேலும் சிலரை வரிசையில் நிற்க வைத்து அடையாளம் காணும்படி நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது காதலனிடம் கூறினார். இதையடுத்து முதலில் பாதிக்கப்பட்ட பெண், பின்னர் அவரது காதலன் பார்த்து 3 வாலிபர்களை அடையாளம் கண்டு உறுதி செய்தனர். தொடர்ந்து பெண் மற்றும் அவரது காதலனிடம் நீதிபதி தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். விசாரணை ஆவணங்களை நீதிபதி தமிழ் இனியன் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

Tags : Coimbatore ,Madurai ,Chitra International Airport ,
× RELATED கதர்த்துறை சார்பில் 2024-25ல் தேர்வு...