திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வஞ்சகத்தின் மறுவடிவமாக இருக்கிற ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சிக்கிறது. வடமாநிலங்களில் மக்கள் தொகை குறைந்த பகுதிகளில் எல்லாம் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ள ஒன்றிய அரசு, மதுரை- கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி வழங்காமல் வஞ்சித்துள்ளது.
தமிழர்களை ஏமாற்றுவதற்காக, திருக்குறளையும் பாரதியார் பாடலையும் இரண்டு வரிகள் இந்தியில் எழுதி படித்து நான் தமிழகத்திற்கு வேண்டியவன் என பிரதமர் மோடி வேஷம் போடுகிறார். இங்கே ஒருவர் (விஜய்) வேனில் ஏறி நின்று பேசுகிறார். அப்பாவி குழந்தைகளும் பெண்களும் நெரிசலில் சிக்கி இறந்த நிலையில், சென்னைக்கு அப்படியே ஓடிப் போய்விட்டார். இறந்த குடும்பங்களுக்கு அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை.
இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று துக்கம் விசாரிப்பது தான் நம்முடைய வழக்கம். ஆனால், அவர்களை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து துக்கம் விசாரிப்பது என்ன பண்பாடா. தமிழ்நாட்டில் இதுவரை எந்த தலைவரும் இதுபோன்று செய்ததில்லை. இது குற்ற உணர்ச்சி இல்லாத செயல். மேடை ஏறியதும் சினிமா டயலாக் விடுகிறார். மக்கள் தன் பின்னால் வருவதைப் பார்த்து நான் தான் அடுத்த முதல்வர் என்கிறார். அது ஒருபோதும் நடக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
