×

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள் 3 பேருக்கு இலக்கிய மாமணி விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 3 தமிழறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகளை வழங்கினார். பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு விளங்கிவரும் தமிழுக்கும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர் பெருமக்களுக்கு தமிழ்நாடு அரசு ‘இலக்கிய மாமணி விருதுகளை வழங்குகிறது. மேலும், ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் பெற்ற எழுத்தாளர்களுக்கு அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடுகள், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், கலைஞரின் பிறந்த நாளையொட்டி 3.6.2021 அன்று முதல்வர், தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் 3 அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ், படைப்புத் தமிழ் ஆகிய வகைப்பாட்டில் 2021ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 அறிஞர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 2024ம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட சென்னை, மாவட்டத்தைச் சேர்ந்த ஞானசுந்தரம் (மரபுத் தமிழ்), திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த காமராசு (ஆய்வுத் தமிழ்). தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் (எ) கலாப்ரியா (படைப்புத்தமிழ்) ஆகியோருக்கு முதல்வர் நேற்று இலக்கிய மாமணி விருதுகளையும், விருதிற்கான ரூ.5 லட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பு செய்தார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Tamil Development Department ,Chennai ,Chennai Secretariat ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...