×

சர்வதேச சாரணர் முகாம் நெல்லையில் இருந்து உ.பி.க்கு 22 மாணவர்கள் பயணம்

நெல்லை, நவ.21: உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் சர்வதேச சாரணர் முகாமில் பங்கேற்க நெல்லையிலிருந்து 22 மாணவர்கள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனர். உத்தரப்பிரதேசத்தில் சர்வதேச சாரண, சாரணியர் அமைப்பின் ஜாம்புரி முகாம் நவம்பர் 23 முதல் 29 வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து நாடுகளைச் சேர்ந்த சாரண, சாரணிய இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர். இம்முகாமில் கலந்து கொள்ளும் பொருட்டு நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்ற சாரண, சாரணிய மாணவர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் நெல்லை ரயில் நிலையத்திற்கு சென்று வழி அனுப்பி வைத்தார். இதில் அரசு மேல்நிலைப்பள்ளி வன்னிக்கோனந்தல், சங்கர் மெட்ரிக் பள்ளி சாரண, சாரணிய அமைப்பில் உள்ள மாணவர்கள் 22 பேர் நேற்று முன்தினம் இரவு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல 3 ஆசிரியர்கள் உடன் சென்றனர். கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு திருச்சி அருகே மணப்பாறையில் ஒரு முகாமை நடத்தியது குறிப்பிடத்தக்கது. முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது மாணவர்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Tags : Nellai ,UP ,International ,Scout ,Camp ,International Scout Camp ,Uttar Pradesh ,Jamboree ,International Scout and Guide Organization ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா