×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழ்நாடு – உ.பி. டெஸ்ட் டிராவில் முடிந்தது

கோவை: தமிழ்நாடு – உத்தரப்பிரதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ரஞ்சி கோப்பை 2வது சுற்று கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. எலைட் ஏ பிரிவில் கடந்த 16ம் தேதி, கோவையில், தமிழ்நாடு-உத்தர்பிரதேசம் அணிகள் இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டி துவங்கியது. முதல் இன்னிங்சில் தமிழ்நாடு அதிரடியாக ஆடி 455 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தமிழ்நாடு அணியின் பாபா இந்திரஜித் 149, ஆந்த்ரே சித்தார்த் 121, அஜிதேஷ் குருசாமி 86 ரன்கள் குவித்தனர். பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய உத்தரப்பிரதேசம் அணி வீரர்களும் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர்.

அந்த அணியின் துவக்க வீரர் கோஸ்வாமி 79 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் உத்தரப்பிரதேசம் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று கடைசி நாளில் முதல் இன்னிங்சை தொடர்ந்த உ.பி. அணி, ரிங்கு சிங்கின் அட்டகாச ஆட்டத்தால் 460 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ரிங்கு சிங் 6 சிக்சர், 17 பவுண்டரிகளுடன் 176 ரன் விளாசினார். உ.பி. 5 ரன் முன்னிலை பெற்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய தமிழ்நாடு அணி 21 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்தது. அதையடுத்து, இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. உ.பி. வீரர் ரிங்கு சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Ranji Trophy Cricket Tamil Nadu – UP Test ,Coimbatore ,Tamil Nadu ,Uttar Pradesh ,Ranji Trophy ,Coimbatore… ,
× RELATED பிட்ஸ்