×

ஊட்டி அருகே கால்வாயில் தவறி விழுந்து 5 மாத குட்டி யானை உயிரிழப்பு

ஊட்டி: ஊட்டி அருகே உள்ள மாயார் அணை கால்வாயில் 5 மாத ஆண் குட்டி யானை தவறி விழுந்து உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, மங்களப்பட்டி, தெங்குமரஹாடா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி மற்றும் பல்வேறு வகை மான்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனப்பகுதியில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்நிலையில், மசினகுடி வனச்சரகத்திற்குட்பட்ட அவரல்லா பகுதியில் வனத்துறையினர் தங்களது வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாயார் அணை கால்வாயில் குட்டி யானை இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.

இது குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு துணை இயக்குநர் வித்யாதர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், இறந்தது பிறந்து 5 மாதங்களே ஆன ஆண் குட்டி யானை என்பது தெரியவந்தது. பின்னர் தெப்பகாடு வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமாரை அங்கு வரவழைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன்னிலையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. குட்டி யானை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : MAYAR DAM CANAL ,Nilagiri District Mudumalai Tigers Archive ,Masinagudi ,Bokkapuram ,Singara ,Mangalapati ,Tengumarahada ,Masinagudi Fort ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...