×

ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை: குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும்: தேமுதிக அறிக்கை

சென்னை: ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ராமேஸ்வரத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் காதலை நிராகரித்ததற்காக கொடூரமாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சியூட்டும் மனிதநேயமற்ற சம்பவமாகும். ஒரு மாணவியின் உயிர் இவ்வாறு பறிக்கப்படுவது மட்டுமல்லாமல், பெண்களும், சிறுமிகளும் பாதுகாப்பற்ற சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தை உருவாக்குவது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

இத்தகைய வன்முறைகள் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான அச்சத்தையும் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய பெரும் கேள்வியையும் எழுப்புகின்றன. இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளி மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதிமன்றம் மூலம் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் எந்தவித தாமதமும், தளர்வும் இருக்கக் கூடாது. பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு என்பது அரசின் முதன்மை பொறுப்பு.

அதனை உறுதியாக நிறைவேற்றுவதற்காக காவல்துறை கண்காணிப்பை மேம்படுத்தியும் கல்வி நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியும் செயல்பட வேண்டியது அவசியம். இந்த மிருகத்தனமான செயலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்த மாணவியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், மனவலிமையும் தெரிவித்துக் கொள்கிறோம். சமூகத்தை பாதுகாப்பாக மாற்ற அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியம் இன்று மேலும் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

Tags : Rameshwari ,Demutika ,Chennai ,Secretary General ,Premalatha Vijayakanth ,Rameshwar ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...