×

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி கண்டனம்

 

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய அரசுக்கு இந்திய கம்யூ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் தீவிரமாக நகரமயமாகி வரும் பகுதிகளில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற மாநகரங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல்களில் திணறி வருவதை அன்றாட வாழ்க்கையில் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இதனால் ஏற்படும் நீண்ட காலதாமதம் சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.

போக்குவரத்து நெரிசல், பொது போக்குவரத்துக்கு ஏற்படும் நெருக்கடி, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி கோவை, மதுரை பெரு மாநகரங்களில் முறையே ரூ.11,340 மற்றும் 10,740 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்துவது என்று தமிழ்நாடு அரசு முடிவு செய்து, சட்டமன்றத்தின் ஒப்புதல் பெற்று, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கேட்பு அறிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, சில திருத்தங்களை கோரியது. அதன்படி திருத்தங்கள் செய்து மீண்டும் 2024 நவம்பரில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய அரசு 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு, கோவை, மதுரை மாநகரங்களின் மெட்ரோ திட்டங்களை நிராகரித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் வஞ்சம் செய்து, துரோகமிழைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. முந்தைய மக்கள் தொகையை கணக்கில் கொண்டு திட்டங்களை நிராகரித்து விட்டு, பிரதமர் சிறிதும் வெட்கமின்றி கோவை மாநகருக்கு வருகிறார் என்பதில் தமிழக மக்களுக்கு திருப்தி இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு, நிகழ்கால வளர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கி, போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பிரதமரையும், மத்திய அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : EU government ,Goa ,Madurai Metro Rail ,Tamil Nadu ,Secretary of State ,Communist Party of India ,Veerapandian ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில்...