×

குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலை கொண்டது. இது மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அனேக இடங்களில் நேற்று மழை பெய்துள்ளது. குறிப்பாக வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்துகொண்டே இருந்தது.

தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 170மிமீ மழை பெய்துள்ளது. திருநெல்வேலி 140 மிமீ, நாகப்பட்டினம் 130மிமீ, திருக்குவளை 120மிமீ, கடலூர், மயிலாடுதுறை 60மிமீ, கும்பகோணம், பள்ளிப்பட்டு, திருச்சி, கும்முடிப்பூண்டி, புதுக்கோட்டை, பேராவூரணி, 30மிமீ மழை பெய்துள்ளது. இருப்பினும் நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. சேலம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையும், அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நேற்று நிலை கொண்டது. இது மேலும் மேற்கு – வட மேற்கு திசையில் நகரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, 22ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்றும் மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை நாளையும் நீடிக்கும். 21ம் தேதி 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும். 22ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வரைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags : Kumari Sea ,Tamil Nadu ,Chennai ,southwest Bay of Bengal ,Sri Lanka ,
× RELATED மாநிலத்தில் 11.19% மொத்த வளர்ச்சி,ஐ.டி –...