×

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பலி லாரி கவிழ்ந்து ஆறாக ஓடிய டீசல்: கேன்களில் பிடித்து சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய டேங்கர் லாரி கவிழ்ந்தது. டேங்கரில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய டீசலைமக்கள் பிடித்து சென்றனர். திருவண்ணாமலை அடுத்த தென்னரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கனகாம்பரம்(70). இவர் நேற்று கடைக்கு செல்வதற்காக திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு டீசல் சப்ளை செய்யும் டேங்கர் லாரி, மூதாட்டி கனகாம்பரம் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்தை தவிர்க்க டிரைவர், திடீரென பிரேக் போட்டதில் லாரி சாலையோரம் கவிழந்தது. டேங்கரில் இருந்த டீசல் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

அதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், டேங்கரில் இருந்து வழிந்த மற்றும் சாலையோரம் தேங்கி நின்ற டீசலை பிளாஸ்டிக் கேன் மற்றும் குடங்களில் எடுத்துச்சென்றனர். பொதுமக்கள் குவிந்ததை தொடர்ந்து, போலீசார் விரைந்து வந்தனர். பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். எதிர்பாராமல் தீப்பற்றினால், டேங்கர் லாரி வெடித்துச் சிதறும் என்ற ஆபத்தை உணராமல் டீசலை பிடித்துச்சென்றனர்.
தொடர்ந்து, விபத்தில் சிக்கிய லாரியை பொக்லைன் இயந்திரம் மூலம் நிலை நிறுத்தி, பாதுகாப்பாக அங்கிருந்து கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால், அங்கு 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. இது தொடர்பாக, டேங்கர் லாரி டிரைவர் வள்ளிவாகை கிராமத்தை சேர்ந்த வேடிப்பன் மீது கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruvannamalai ,Kanakambaram ,Thennarasampattu village ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...