×

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை: சாலையில் ஆறாக ஓடிய வெள்ளம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர், கல்பாக்கம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி, தாம்பரம், கேளம்பாக்கம், செம்பாக்கம், பல்லாவரம் உள்பட பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால், சாலையில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே நீர்நிலைகளான ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த மழையால், நேற்று காலையில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பணிக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், ஏற்கனவே பல ஹெக்டேரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை, வெண்டை, கத்தரி, காராமணி, உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். செய்யூர்: சித்தாமூர் ஒன்றியம் கொளத்தூர் ஏரி சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் மூலம் கொளத்தூர் மற்றும் சுற்றியுள்ள 200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்தாண்டு பருவ மழையின்போது பெய்த கனமழையால் ஏரி முழு கொள்ளளவை அடைந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தங்களது விவசாய பணிகளை உடனடியாக மேற்கொண்டு வந்தனர். இதனால் ஏரியில் நீர்மட்டம் குறைந்துவந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த கனமழையால் கொளத்தூர் ஏரி மீண்டும் நிரம்பியது. அதன் முழு கொள்ளளவை எட்டியதால், மறுகால் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. விவசாய பணிகள் முழுவீச்சில் நடைபெறும் நிலையில், மீண்டும் ஏரி நிரம்பியதால் கொளத்தூர் பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நேற்று முன்தனிம் முதல் ஒரே சீரான மழை பெய்தது. இதனால், காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோவிந்தவாடி அகரம், விஷார், தாமல், களியனூர், வையாவூர் பகுதிகளில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த திடீர் மழையால் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில் உள்ள ரெட்டை மண்டபம், தாலுகா அலுவலகம் அருகே காமராஜர் சாலை, மேட்டுத்தெரு, கீரை மண்டபம், செட்டித்தெரு, மேற்கு ராஜவீதி, வடக்கு மாடவீதி, உலகளந்த பெருமாள் கோயில், விளக்கடி கோயில் தெரு, ரங்கசாமி குளம், மேட்டுத்தெரு சந்திப்பு உள்பட பல பகுதிகளில் மழைநீர் வெளியேற வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீருடன் மழைநீர் கலந்து, பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

மதுராந்தகம்: மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு பெய்த மழையில் குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் நிரம்பின. மேலும், வயல்வெளிகளில் சரியான ஈரப்பதமும் இருந்தது. கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால், கூடுதலாகவே தண்ணீர் கிடைக்கிறது என விவசாயிகள் கருதுகின்றனர். பலநூறு ஏக்கரில் பயிர் செய்து, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மர்காழி மாதத்தில் வேர்க்கடலை பயிரிடுவதை விவசாயிகள் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதையொட்டி, தற்போது பலநூறு ஏக்கரில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். இந்த வேர்க்கடலை பயிர்கள் அனைத்தும், முளைக்கும் சூழலில், அழுகி வீணாகியுள்ளது. மேலும், முளைத்த வேர்க்கடலை செடிகளும் இந்த மழையில் அழுகியுள்ளன. இதேபோல், எதிர்வரும் கோடைகாலத்தில் விற்பனை செய்வதற்கு தர்ப்பூசணி நடவு செய்த விவசாயிகளும் பெரிய பாதிப்படைந்துள்ளனர். மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளான அச்சிறுப்பாக்கம், சித்தாமூர். செய்யூர், பவுஞ்சூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிப்படைந்த விவசாயிகளின் நிலங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

* மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேகமூட்டமாக இருந்தது. இதையடுத்து, 2 நாட்களாக மிதமான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனர். காஞ்சிபுரத்தில் ஜெம் நகர், ஓரிக்கை மிலிட்டரி சாலையில் உள்ள ஆசிரியர் நகர், ராஜன் நகர், திருவேங்கடம் நகர், காஞ்சிபுரம் மேட்டுத் தெரு, கீரை மண்டபம், செட்டித்தெரு உள்பட பல பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கியது. கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ராகவேந்திரா நகர், ரேவதி நகர் உள்பட தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி, வீடுகளில் புகுந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

Tags : Vidya Vidya ,Chengai ,districts ,Kanchi ,
× RELATED திருச்சியில் சிக்கிய ரூ.1 கோடி அதிமுக...