×

சொத்து வரிக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வருவாய் ஆய்வாளர் கைது

ஆவடி: திருநின்றவூர் பிரகாஷ் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி(45). சமூக ஆர்வலர். இவருக்கு ஆவடி அடுத்த கோயில்பதாகை அண்ணா வீதியில் காலி மனை உள்ளது. கடந்த நவம்பர் 6ம் தேதி கலைச்செல்வி மனைக்கு சொத்துவரி செலுத்தவதற்காக ஆவடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய் துறையில் விண்ணப்பம் கொடுத்திருந்தார். மேலும், இதுதொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தி(51) என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் வரிபோட்டு தருவதாக கூறியுள்ளார். மேலும், அவர் புரோக்கர் வின்சென்ட்(30) என்பவரிடம் பணம் கொடுக்கும்படி கூறியுள்ளார். இதுகுறித்து கலைச்செல்வி, ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி சீனிவாசப்பெருமாளிடம் புகார் செய்தார்.

பின்னர், போலீசார் கலைச்செல்வியிடம் ரசாயன பவுடர் தூவிய லஞ்ச பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை கலைச்செல்வி ஆவடி மாநகராட்சி அலுவலகம் வந்து புரோக்கர் வின்சென்டிடம் லஞ்ச பணம் ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வின்சென்ட்டை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் அங்கிருந்து தப்பி லஞ்ச பணத்துடன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும், போலீசார் அவரை விடாது துரத்தி சுற்றிவளைத்து பணத்துடன் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர், போலீசார் அவரை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வருவாய்த்துறை பிரிவுக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப்பின் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய் ஆய்வாளர் சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.    

Tags : Revenue inspector ,
× RELATED வாக்காளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி தேர்தல் விழிப்புணர்வு