×

பீகாரின் முதலமைச்சராக 10வது முறையாக நவ.20ம் தேதி நிதிஷ்குமார் பதவி ஏற்கிறார்!!

பாட்னா: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிய அரசு வரும் 20ம் தேதி பதவியேற்க உள்ளது. முதல்வர் தேர்வில் நிலவிய குழப்பம் முடிவுக்கு வந்துள்ளதைத் தொடர்ந்து, 10வது முறையாக நிதிஷ் குமாரே முதல்வராக பதவியேற்க உள்ளார். பீகாரில் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இக்கூட்டணியில் பாஜ 89 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி 19, இந்துஸ்தான் அவாம் மோர்சா 5, ஆர்எல்எம் 4 இடங்களில் வென்றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு 35 இடங்களே கிடைத்தன.

பீகாரில் கடந்த 20 ஆண்டாக நிதிஷ் குமார் முதல்வராக நீடித்து வருகிறார். இதையடுத்து, டெல்லியில் பாஜ மேலிடத்துடன் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், வேறு வழியின்றி மீண்டும் நிதிஷ் குமாரையே முதல்வர் பதவியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், பீகார் மாநிலம், பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் வருகின்ற நவ. 20 வியாழக்கிழமை அன்று 10-வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்பார் என்று பாஜக மூத்த தலைவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தர்மேந்திர பிரதான், சிராக் பாஸ்வான், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம், பாஜகவைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வர் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. அதில், 17வது பீகார் சட்டப்பேரவையை கலைக்க முடிவு செய்யப்பட்டு, நிதிஷ்குமார் ஆளுநரை சந்தித்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். மேலும் பாஜக – ஜேடியு கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு பிறகு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை கோருவார்.

Tags : Nitish Kumar ,Chief Minister of ,Bihar ,Patna ,National Democratic Alliance ,Bihar Legislative Assembly elections ,Nitish Kumare ,Chief Minister ,
× RELATED பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு...