×

சவுதி பேருந்து விபத்தில் 42 பேர் பலி : பலியான இந்தியர்கள் குடும்பத்திற்கு உதவ தூதரகத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவு!!

ரியாத் : சவுதி அரேபியா பேருந்து விபத்தில் பலியான இந்தியர்களுக்கு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியாவின் மதீனா அருகே பேருந்து – டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்து தீப்பற்றியது. இதில் பேருந்தில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மற்ற உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில்,” மதீனாவில் இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ரியாத் தூதரகம் மற்றும் ஜெட்டா துணைத் தூதரகம் முழு ஆதரவு அளித்து வருகின்றன.” எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜெட்டா துணைத் தூதரகம் வெளியிட்டிருக்கும் பதிவில், 24 மணிநேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களை அறிய 8002440003 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

Tags : Saudi ,EU government ,RIYADH ,UNION FOREIGN MINISTER ,INDIANS ,Medina, Saudi Arabia ,Mecca ,Medina ,Umrah ,
× RELATED திருப்பதியில் 2025ம் ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்று சாதனை!