×

மகரந்த சேர்க்கை வாயிலாக கலப்பினமாக தோன்றிய புதிய நெல் ரகங்கள் குறித்து வேளாண் மாணவர்கள் ஆய்வு

காரைக்கால், ஜன. 6: காரைக்கால் மேலக்காசாக்குடியை சேர்ந்தவர் பாஸ்கர். வணிகவியல் இளங்கலை பட்டதாரியான இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருப்பினும் விவசாயம் மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததால் 15 ஆண்டுகளுக்கு முன் புதுவை விவசாயத்துறையின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின்கீழ் இயற்கை முறை சாகுபடியை ஊக்குவிக்க அவருக்கு பயிர் வளர்ப்பு வழிமுறை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டன. அதைதொடர்ந்து அவர் இயற்கை முறையில் 35 ஏக்கரில் நெல் சாகுபடி செய்கிறார். மரபுசாரா ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அவர் மகரந்த சேர்க்கை வாயிலாக கலப்பினமாக தோன்றிய புதுமையான வடிவமைப்பு கொண்ட 32 நெல் ரகங்களை தேர்வு மூலம் அடையாளம் கண்டு ஒவ்வொன்றையும் தனிமைப்படுத்தி அவற்றின் குணங்களை கவனித்து தனித்துவத்தை ஆய்வு செய்து பாதுகாத்து வருகிறார். அவர் கண்டறிந்த புதுமையான நெல் ரகங்களுக்கு நெல்லப்பர் 1, 2 என வரிசையாக பெயரிட்டு சேமித்து வருகிறார்.

இந்நிலையில் பாஸ்கரை புதுச்சேரி அரசின் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காமாண்டு இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயின்று வரும் 28 மாணவ மாணவியர், அவர்களது ஊரக மற்றும் விவசாய அனுபவ களப்பணி என்ற பயிற்சியின் பாடத்திட்ட ஆசிரியர் ஆனந்த்குமார் தலைமையில் சந்தித்து ஆய்வு நடத்தினர். அப்போது இணை பேராசிரியர் ஆனந்த்குமார் பேசுகையில், விவசாயி பாஸ்கரின் நெல்லப்பர் ரகங்கள் காரைக்காலின் தட்பவெப்ப, காலநிலை, மண், தண்ணீர் ஆகியவற்றுக்கு பொருந்தும் வகையில் வெற்றிகரமாக உருவாக்கிய உள்நாட்டு மரபணுக்கள். இவை தேசிய பல்லுயிர் பாதுகாப்பு சட்டப்படி ஆவணமாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு உரிய அங்கீகாரம் கொடுத்து பாதுகாக்கலாம். மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி காரைக்காலுக்கு ஏற்ற நெல் ரகங்களை உருவாக்கலாம் என்றார்.

Tags :
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா