×

தவெக.வையும் அழைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு விஜய் வேண்டுகோள்

 

சென்னை: சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) தொடர்பாக தேர்தல் ஆணையம் நடந்தும் கூட்டங்களுக்கு தவெக.வையும் அழைக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையருக்கு விஜய் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘‘மக்களின் வாக்களிக்கும் உரிமையே ஜனநாயகத்தின் வெற்றி. தமிழகத்தில் நடைபெறும் எஸ்ஐஆர் தொடர்பான ஆலோசனை கூட்டங்களுக்கு தவெக அழைக்கப்படுவதோ, அனுமதிக்கப்படுவதோ இல்லை. தமிழகத்தின் மற்ற கட்சிகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தவெக.வுக்கும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனின் குரலாக தவெக இருக்கும். இனி நடைபெறும் ஆலோசனை கூட்டங்களுக்கு தவெக.வையும் அழைக்க வேண்டும்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு 3 மாதத்திற்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்த எஸ்ஐஆர் அவசர அவரசமாக நடைமுறை படுத்தப்பட்டது. தற்போது தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி இப்போதே எஸ்ஐஆர் பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனால் எஸ்ஐஆர் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை. வரவிருக்கும் தேர்தல்களில் மாநிலம் முழுவதும் போட்டியிட உள்ளோம். ஒவ்வொரு குடிமகனின் குரலும் கேட்கப்படும் வகையில் ஜனநாயக செயல்முறையை மேம்படுத்துவதற்கு எங்கள் கட்சி உறுதியாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது. எனவே, இந்த தேர்தல் முறையை மேம்படுத்தும் பொது நோக்கில் எவருக்கும் பாதகமில்லாத இந்த நியாயமான கோரிக்கையை சாதகமாக பரிசீலிக்கும்படி,

இந்திய அரசியல் சட்டத்தின் 324ம் கட்டளையின் கீழ் உங்களது மேற்பார்வை அதிகாரத்தின் படி, தமிழக மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் தேவையான அறிவுரைகளை வழங்குமாறும் எங்களது மனுவை அவர்களிடம் கொண்டுசெல்லுமாறும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகளுடன் நடத்தப்படும் அனைத்து ஆலோசனைகள் மற்றும் கலந்துரையாடல்களில் தவெக முறையாக சேர்க்கப்படுவதை இது உறுதி செய்ய வேண்டும்” என வேண்டுகோள் வைத்துள்ளார்.

Tags : Dew ,Vijay ,Election Commission ,Chennai ,AKKADSI ,Chief Election Commissioner ,Tamil Nadu ,Indian ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...