×

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்!

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் கூறியதாவது; மேகதாது அணை தொடர்பாக கர்நாடக அரசு தயாரித்து சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் எதிராக செயல்பட்டு தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து வஞ்சித்து வரும் நிலையில், தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பின் மூலம் மேகதாது அணை விவகாரத்தில் அம்மாநில அரசு தன் பணிகளை மீண்டும் தீவிரப்படுத்தும் என்ற அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

ஏற்கனவே, காவிரியின் அடிமடைப்பகுதியில் பல அணைகளை கட்டியிருக்கும் கர்நாடக அரசு, தற்போது கிடைத்திருக்கும் இந்த தீர்ப்பை பயன்படுத்தி மேகதாது அணையை கட்டும் பணியை தீவிரப்படுத்தும் பட்சத்தில் கடைமடை பகுதியான தமிழகத்தின் விவசாயிகளுக்கு காவிரி நீர் என்பது காணல் நீராக மாறிவிடும் என்ற அபாயத்தை உருவாக்கியுள்ளது.

எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை உடனடியாக தாக்கல் செய்வதோடு, வலுவான வாதங்களை முன்வைத்து, தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசின் அணைகட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Karnataka government ,Mekedadu Dam ,T.T.V. Dinakaran ,Chennai ,AMMK ,General Secretary ,Mekedadu Dam… ,
× RELATED திருப்பரங்குன்றம் விவகாரம் அரசின்...