×

நிலுவை தொகையை வழங்க கோரி அலங்கை சர்க்கரை ஆலையில் உள்ளிருப்பு போராட்டம்

அலங்காநல்லூர், ஜன. 6: நிலுவை தொகையை வழங்க கோரி அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு பற்றாக்குறை காரணமாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆலையில் பதிவு செய்த கரும்புகள் 30 ஆயிரம் டன்னுக்கு மேல் விவசாயிகள் வசமுள்ளது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் கரும்புகளை வெட்ட முடியாமலும், ஆலை அரவையை துவங்குமா என விவசாயிகள் பலரும் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரும்பு அரவை செய்த விவசாயிகளுக்கும், ஆலை தொழிலாளர்களுக்கும் நிலுவை தொகை ரூ.200 கோடி பாக்கி வைத்துள்ளனர். இதனை தமிழக அரசு வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இதுகுறித்து பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசின் பாராமுகத்தால் இந்த ஆலை நிரந்தரமாக மூடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தான் ஒரு விவசாயி என கூறி கொள்ளும் தமிழக முதல்வரை அலங்காநல்லூர் பகுதி விவசாயிகள் சார்பில் பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உடனே நிலுவை தொகையை வழங்க கோரியும், கரும்பு அரவையை துவங்க கோரியும் நேற்று முதல் ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு கரும்பு சங்க மாநில தலைவர் பழனிசாமி தலைமையில், ஆலை நிர்வாக குழு உறுப்பினர் மொக்கமாயன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். தங்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி அங்கேயே சமையல் செய்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : protest ,sugar mill ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...