- உயர் நீதிமன்றம்
- சென்னை
- உச்ச நீதிமன்றம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தலைமை நீதிபதி
- எம்.எம். ஸ்ரீவஸ்தவா
- நீதிபதி
- ஜி. அருள் முருகன்…
சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநிலங்களில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆகியோர் ஆஜராகினர்.
மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2025 செப்டம்பர் 30ம் தேதிவரை முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீது 216 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதாவது தமிழ்நாட்டில் 193 வழக்குகளும், புதுச்சேரியில் 23 வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது. அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தடை உத்தரவுகளால் பல வழக்குகள் விசாரிக்கப்படாமல் உள்ளது.
எனவே, எந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை உயர் நீதிமன்றம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பட்டியலாக தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால தடை உத்தரவு இல்லாத வழக்குகளை விசாரணை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையை தேவையில்லாமல் தள்ளிவைக்காமல் விசாரித்து முடிக்க வேண்டும்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாத வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரணை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும். இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் இருக்கும். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டவுடன் சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும். சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தால் விசாரணையை தள்ளிவைக்காமல் சாட்சியத்தை பதிவு செய்ய வேண்டும்.
நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர், டிஜிட்டல் வசதிகள் இருந்தால் வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
