×

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

பொள்ளாச்சி, ஜன.5: பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று முதல், பொங்கல் பரிசு தொகுப்பு  விநியோகத்தை துணை சபாநாயகர் துவக்கி வைத்தார். பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் சுமார் 240க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில், சுமார் 1.39 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில், அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இந்த ஆண்டு இலவச வேட்டி சேலை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், இலவச வேட்டி சேலை போதியளவு வராததால், அதனை உரிய பயனாளிகளுக்கு விரைந்து வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி பொதுவிநியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகளில் அரிசி பெறுவோர் மற்றும் வருமைகோட்டிற்கு கீழ் உள்ள சுமார் 90ஆயிரத்து 355 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தமிழக அரசு பொங்கல் பரிசாக, சர்க்கரை மற்றும் பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், முழு நீள செங்கரும்பு மற்றும் ரூ.2500 வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி நேற்று முதல், உரிய பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு விநியோகம் துவங்கப்பட்டது.
இதில், நகராட்சி 1 மற்றும் 2வது வார்டு பகுதியான வடுகபாளையத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு  விநியோகம் துவங்கப்பட்டது. இதற்கு, கோவை மத்திய கூட்டறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் வைத்திநாதன், தாசில்தார் தணிகைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி விநியோகத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவு துணை துணை பதிவாளர் செல்வராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் ஜேம்ஸ்ராஜா, நகர பொருளாளர் வடுகை கனகு, நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பெப்சி மகேஷ் மற்றும் வீராசாமி, சுரபிரமேஷ், மகாலிங்கம், சேது, பாலு, ஆறுமுகம், மணி, மகேஸ்வரி, கவிதா, சண்முகம், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது: ‘பொள்ளாச்சி தாலுகாவில் நகர் மற்றும் கிராம புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம், தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. நகர் மற்றும் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளில், உரிய பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்கள் வழங்கும் பணி தற்போது துவங்கப்பட்டுள்ளது’, என்றார்.

Tags : ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு