×

நிதி மோசடி வழக்கில் ஜாமீன் உத்தரவாதத்தை நிறைவேற்றாததால் தேவநாதனை கைது செய்ய வேண்டும்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் உடனடியாக தேவநாத யாதவை கைது செய்யுமாறு சென்னை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் பண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்டோர் மூன்றாவது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் அக்டோபர் 30ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத்தொகையாகச் செலுத்த வேண்டும். அவர் விசாரணைக்குத் தேவையான போது ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்கக்கூடாது மற்றும் வேறு எங்கும் செல்லக்கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேவநாதன் யாதவ் சரணடைய மேலும், ஒரு வாரம் அவகாசம் வழங்கினார்.

மேலும், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன் முன்பு வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலீட்டாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.திருமூர்த்தி மனு ஒன்றை தாக்கல் செய்து வாதிட்டார்.

அதில், சென்னை உயர்நீதிமன்றம் விதித்த எந்த ஜாமீன் நிபந்தனைகளையும் தேவநாதன் யாதவ் நிறைவேற்றவில்லை. சென்னை உயர்நீதிமன்ற விதித்த காலக்கெடுவுக்குள் நூறு கோடி ரூபாய் வைப்புத் தொகை செலுத்தவில்லை, சரணடைய வில்லை. மேலும் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால் அது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரினார்.

மனுவை விசாரித்த நீதிபதி முருகானந்தம் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவரை உடனடியாக காவல்துறை கைது செய்ய வேண்டும். மேலும் ஜாமீன் நிபந்தனை நிறைவேற்றாததால் அது குறித்தும் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Tags : Chennai Special Court ,Devanathan ,Chennai ,Chennai Investors Protection Special Court ,Devanathan Yadav ,
× RELATED ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய...