கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை அடித்து கொன்ற வடமாநில தொழிலாளி கைது

சூலூர்,ஜன.5: கோவை மாவட்டம், சூலூர் அடுத்த கள்ளப்பாளையத்தில் ஒண்டிக்காரன் தோட்டம் உள்ளது. இப்பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் (26), அவரது மனைவி சத்யா என்ற ரூனு (23), பீகாரை சேர்ந்த ரஞ்சித் (22) உள்பட வடமாநில தொழிலாளர்கள் 15 பேர் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் சுதர்சன் அந்த வழியாக ஓடிச்சென்றார். இதனால் அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து, சுதர்சன் தங்கியிருந்த வீட்டில் எட்டி பார்த்தபோது அவரது மனைவி ரூனு, ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், அருகில் ரஞ்சித் ரத்தம் வழிந்த நிலையில் படுகாயத்துடனும் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரூனு சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ரஞ்சித், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய சுதர்சனை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.போலீசில் சுதர்சன் அளித்த வாக்குமூலம்: எங்கள் வீட்டுக்கு அருகே வசித்து வந்த ரஞ்சித்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி இருவரும் சேர்ந்து மது குடிப்பது வழக்கம். நாளடைவில் எனது மனைவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதுபற்றி அறிந்த நான், இருவரையும் கண்டித்தேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சித், அவரது சொந்த ஊரான பீகாருக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஞ்சித் மீண்டும் எனது வீட்டுக்கு வந்தார். நடந்த சம்பவத்துக்காக தான் வெட்கப்படுவதாகவும், இனிமேல் இதுபோல் தவறை செய்ய மாட்டேன் என தெரிவித்தார். இந்நிலையில் இன்று (நேற்று) காலை வீட்டுக்கு வந்தார். நான், எனது மனைவி, ரஞ்சித் மூவரும் மது குடித்தோம். சிறிது நேரம் கழித்து எனது மனைவி, கடைக்கு சென்று இறைச்சி வாங்கி வாருங்கள் என கூறியதை தொடர்ந்து நான், இறைச்சி வாங்குவதற்காக சூலூர் வந்துவிட்டு, மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டில் எனது மனைவியுடன் ரஞ்சித் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து விட்டேன். இதனால் ஆத்திரம் அடைந்த நான், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து அவர்கள் இருவரையும் சரமாரி தாக்கினேன். இதில் எனது மனைவி ரூனு, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த நான், அங்கிருந்து ஓட்டம் பிடித்து டவுனில் சுற்றித்திரிந்தேன். ஆனால் போலீசார் பிடித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட சுதர்சன், கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>