×

எஸ்ஐஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

*ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

நாமக்கல் : நாமக்கல்லில் திமுக கூட்டணி கட்சி சார்பில், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (எஸ்ஐஆர்) எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வைத்து, கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது: இந்தியாவில் இதற்கு முன்பு 8 முறை வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் எந்த தேர்தலும் நடைபெறவில்லை.

ஆனால், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை அவசர, அவசரமாக செய்ய வேண்டிய அவசியம் என்ன?. தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், சுமார் 2 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர்.

இவர்களில் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை, தற்போது தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. கணக்கெடுப்பு படிவம் தரவில்லை எனக்கூறி, வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது. பீகார் மாநிலத்தில், சமீபத்தில சுமார் 60 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளது.

இவர்களில் 45 லட்சம் பேர், காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதேபோல், தமிழகத்திலும் திமுகவுக்கு ஆதரவான வாக்காளர்களை நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையம் மூலம், மோடி அரசு முயற்சிக்கிறது. ஆனால், அது தமிழகத்தில் நடைபெறாது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக பொறுப்பு ஏற்பார். இதை தடுக்கும் நோக்கில் அதிமுகவும், பாஜவும் சேர்ந்து நடத்தும் நாடகம் தான் வாக்காளர் பட்டியல் திருத்தமாகும்.

அவர்களது எண்ணம் பலிக்காது. திமுகவும் அதன் கூட்டணி கட்சியினரும், வீடு வீடாக சென்று, எஸ்ஐஆர் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, மாதேஸ்வரன் எம்பி, எம்எல்ஏ ராமலிங்கம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார்.

இளங்கோவன், மாவட்ட அவை தலைவர் மணிமாறன், திமுக மாநில நிர்வாகிகள் ராணி, வழக்கறிஞர் நக்கீரன், டாக்டர் மாயவன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக், செய்தி தொடர்பாளர் செந்தில், வழக்கறிஞர் தமிழரசு, திமுக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கொமதேக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு எஸ்ஐஆர் திருத்தத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

அமித்ஷாவின் எண்ணம் தமிழ்நாட்டில் நிறைவேறாது

ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி பேசுகையில், ‘எஸ்ஐஆர் திருத்தத்தை தீவிரமாக எதிர்க்கும்படி, தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

எஸ்ஐஆர் திருத்த பணியில், திமுகவினர் உஷாராக இருக்க வேண்டும். எஸ்ஐஆருக்கு ஆதரவளிக்கும் பாஜ, அதிமுகவுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். நாம் யாரிடமும் ஏமாறக்கூடாது.

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் எண்ணம், தமிழ்நாட்டில் நிறைவேறாது. அவர்கள் எத்தனை முயற்சி எடுத்தாலும், திராவிட மாடல் தலைவரிடம் எடுபடாது,’ என்றார். கொமதேக நாமக்கல் மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் எம்பி பேசுகையில், ‘பாஜ அரசின் திட்டங்களால் நாடு முழுவதும், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஸ்ஐஆர் திருத்தத்தின் மூலம், பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மழைக்கால கூட்டத்தொடரை பாஜக அரசால் சுமூகமாக நடத்த முடியவில்லை. தற்போது டெல்லியில் குண்டு வெடித்துள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத அரசாக பாஜ அரசு உள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும், பாஜவால் சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும்,’ என்றார்.

Tags : DMK ,Namakkal ,SIR ,DMK alliance ,Election Commission ,Special Radical Revision ,East District DMK… ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...