×

பந்தலூர் அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் ஆதிவாசி மக்கள் அவதி

பந்தலூர் : பந்தலூர் அருகே குடிநீர் இல்லாமல் அவதிப்படும் குந்தலாடி ஓர்கடவு ஆதிவாசி மக்கள் குடிநீர் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குந்தலாடி ஓர்கடவு ஆதிவாசி காலனியில் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவர்களின் குடிநீர் தேவைக்கு நெலாக்கோட்டை ஊராட்சி சார்பில் கடந்த பல வருடங்களுக்கு முன் கிணறு அமைக்கப்பட்டு மற்றும் பம்புசெட், குழாய்கள் பதிக்கப்பட்டு, குடியிருப்பு பகுதியில் தண்ணீர் தொட்டி வைத்து குடிநீர் தேக்கி வைத்து விநியோகம் செய்து வந்தனர்.

அதனை முறையாக பராமரிக்காமல் குடிநீர் தொட்டி உடைந்து குடிநீர் தேக்கி வைக்க முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது, அதனால் சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் பிதர்காடு வனத்துறை சார்பில் கிணறு மற்றும் நீர் தேக்க தொட்டி, குழாய்கள் பதிக்கப்பட்டு இதுவரை குடிநீர் விநியோகம் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆதிவாசி மக்கள் தண்ணீர் இல்லாமல் குடங்கள் மற்றும் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு நீர் நிலைகளை தேடி தொலை தூரங்களுக்கு சென்று குடிநீர் சுமந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்றாடம் கூலி வேலைகளுக்கு சென்று யானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியில் குடிநீருக்காக அழைந்து வரும் இந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சீரான குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Pandalur ,Kunthaladi Orkadavu ,Kunthaladi Orkadavu Adivasi Colony ,Nelakottai Panchayat ,Gudalur ,Panchayat ,Union ,Nilgiris District… ,
× RELATED மதுரையில் மதநல்லிணக்க மக்கள்...