×

முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி பேச்சு அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் இல்லை


திருவண்ணாமலை, ஜன.5: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறும் அதிமுக ஆட்சியால், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி பேசினார். திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவனூர் ஊராட்சியில், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி பேசியதாவது: திமுக ஆட்சி காலத்தில்தான் திருவண்ணாமலை மாவட்டம் வளர்ச்சி திட்டங்களை பெற்றிருக்கிறது. உழவர் சந்தை, கடன் தள்ளுபடி, சமத்துவபுரம், மகளிர் குழு கடன் என ஏழை, எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக ஆட்சிதான் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்திருக்கிறது. திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்தது. விவசாயிகளுக்கு ₹7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் கலைஞர். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் நடைபெறவில்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என பலமுறை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், அதிமுக அரசு இந்த கோரிக்கையை கண்டுகொள்ளவில்லை.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 3 வேளாண் சட்டங்களை, அதிமுக ஆதரித்திருக்கிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் அதிமுக ஆட்சியை, வரும் தேர்தல் மூலம் அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.மாரிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்ணன், அவைத் தலைவர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய துணை செயலாளர் மலர்விழி, ஆருத்ராப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஏழுமலை, விவசாயி அணி ஆசைதம்பி, பாபு, பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : K. Pichandi ,speech ,AIADMK ,
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...