×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.1.46 கோடியில் கோயில் மண்டபம் சீரமைப்பு பணிகள்

ஈரோடு : ஈரோட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், பெரிய மாரியம்மன் வகையறா கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தை ரூ.1.46 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கோயிலாக பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வகையறா கோயில்களாக காரை வாய்க்கால் மாரியம்மன், சின்ன மாரியம்மன் கோயில் உள்ளது.

தமிழ்நாட்டில் ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை தீவிரமாக மீட்டு வருகின்றது. அந்த வகையில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலில் வகையறா கோயிலான, காரை வாய்க்கால் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 64 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம், கடந்த 2022ம் ஆண்டு மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட அந்நிலத்தில் கோயிலுக்கு சொந்தமான மண்டபம் உள்ளது. அந்த மண்டபம் பயன்பாட்டிற்கு கொண்டு வர, கோயில் நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. மேலும், கோயில் மண்டபத்தை முறையாக பராமரிக்க ஆர்வம் காட்டாததால், மண்டபத்தை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்டது. எனவே, சிதிலமடைந்த நிலையில் இருக்கும் அம்மண்டபத்தை, சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையில், அந்த மண்டபத்தை சீரமைத்து, நவீன வசதிகளுடன் கூடிய கழிவறை, குடிநீர் வசதி மற்றும் பார்க்கிங் உள்ளிட்டவைகள் அமைத்து, எழை, எளிய, நடுத்தர மக்களின் சுபநிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான அம்மண்டபத்தை ரூ.1.46 கோடி மதிப்பில் சீரமைக்க, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்திருந்தது. அந்த வகையில், மண்டபத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் மண்டபத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: எழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலும், இந்து சமய அறநிலையத்துறையின் வருவாயை அதிகரிக்கும் வகையிலும், பக்தர்களின் கோரிக்கையை ஏற்றும், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தை ரூ.1.46 கோடி மதிப்பில் சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, மண்டபத்தில் பழுதடைந்த இடங்கள் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இவை தவிர, மண்டபத்தில் மண மேடை, டைனிங் ஹால், நவீன வசதியுடன் கூடிய கழிவறை, பார்க்கிங் உள்ளிட்டவைகள் அமைக்க கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதாவது கட்டுமான பணிகள் தற்போது வரை 20 சதவீதம் நிறைவடைந்திருக்கிறது. இந்த கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Hindu Religious Foundation Department ,Erode ,Great Maryamman Vakaiara Temple ,
× RELATED இந்திய ரயில்வே மின்மயமாக்கம் 99.2...