×

4 ஆண்டுக்கு முன் காணாமல் போன 55 வயது பெண் உ.பி.யில் மீட்பு

கோவை, ஜன.4: கோவையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 55 வயது பெண் உத்தரபிரதேசத்தில் மீட்கப்பட்டார். கோவை நரசீபுரத்தை சேர்ந்தவர் செண்பக மூர்த்தி. இவரது மனைவி நாகலட்சுமி (54). இவரது மகள் மங்களசெல்வி (34). அவரது, கணவர் சந்தோஷ்குமார் (34). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மனநல சிகிச்சை பெறுவதற்காக நாகலட்சுமி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திடீரென ஒரு நாள் காணாமல் போனார். உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

பின்னர், மங்களசெல்விக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில், பேசிய நாகலட்சுமி, கோவை டவுன்ஹால் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர், மங்களசெல்வி மீண்டும் அதே செல்போனுக்கு அழைத்துள்ளார். ஆனால், அதில் பேசிய ஒரு பெண், நான் கேரளாவில் இருப்பதாகவும், என்னிடம் ஒரு பெண் பேசுவதற்காக செல்போனை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் கேரளாவிலும் உறவினர்கள் மூலமாக தேடி பார்த்தனர். ஆனால், நாகலட்சுமி கிடைக்கவில்லை. சில நாட்கள் கழித்து இதேபோல் சென்னையில் இருந்து நாகலட்சுமி செல்போனில் பேசியுள்ளார். அங்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், கடந்த வாரம் உத்தரபிரதேசத்தில் இருந்து நாகலட்சுமி போனில் பேசியுள்ளார். பின்னர், அதே எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது இந்தியில் வாலிபர் ஒருவர் பேசினார். அவரிடம் ஆங்கிலத்தில் பேசி விவரம் கேட்டபோது, அந்தப் பெண்ணை உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மங்களசெல்வி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மூலமாக நாமக்கல் எம்.பி சின்ராஜை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

அவரும் நாகலட்சுமியை மீட்டு கோவை அழைத்து வர ஏற்பாடு செய்தார். பின்னர், கொ.ம.தே.க. பொது செயலாளர் ஈஸ்வரன் அறிவுறுத்தலின் பெயரில் மங்கள செல்வியின் கணவர் சந்தோஷ்குமார் ஐதராபாத் சென்று, வாரணாசியில் இருந்து பேருந்தில் உத்தரபிரதேசம் சென்றார்.அங்கு அவர் காவல் நிலையத்தில் சென்று விசாரித்தார். பின்னர், உரிய ஆவணங்களை காண்பித்தவுடன் நாகலட்சுமி மற்றும் சந்தோஷ்குமார் கோவை செல்ல உத்தரப்பிரதேச போலீசார் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். பின்னர், இதுகுறித்து உத்தரபிரதேச போலீசார், கோவை ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை உத்தரப்பிரதேசத்தில் இருந்து ரயிலில் நாகலட்சுமி, சந்தோஷ்குமார் கோவை ரயில் நிலையம் வந்தனர்.

அவருக்கு உறவினர்கள் மற்றும் கொ.ம.தே.க.வின் மாநகர செயலாளர் தனபால், தலைமை நிலை செயலாளர் வடிவேல், துணை தலைவர் பொன்னுசாமி, துணை செயலாளர் நடராஜ், மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி, தீரன் தொழிற்சங்க பேரவை மாநகர தலைவர் ஆறுச்சாமி, தலைவி சூர்யகலா ஆகியோர் வரவேற்பு அளித்தனர். அவரது உறவினர்கள் நாகலட்சுமியை 4 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

Tags : UP ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...