×

கூட்டு பண்ணைய குழுவுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

பாபநாசம், ஜன. 4: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கணபதி அக்ரஹாரத்தில் அட்மா திட்டம் சார்பில் கூட்டு பண்ணைய குழுவுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. பாபநாசம் வேளாண் உதவி இயக்குனர் மோகன் பங்கேற்று உழவர் ஆர்வலர் குழு உறுப்பினராவதற்கான தகுதிகள், குழு உருவாக்கம், வங்கி கணக்கு தொடங்குதல் மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழு தொடங்கும் முறை குறித்து விளக்கம் அளித்தார். பாபநாசம் வட்டார வேளாண்மை அலுவலர் ஜெகதீஸ்வர் பங்கேற்று உழவர் உற்பத்தியாளர் குழு நடைமுறை, அரசிடமிருந்து பெறப்படும் தொகுப்பு நிதி ரூ.5 லட்சம் பெறும் முறை, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது, தொகுப்பு நிதியிலிருந்து பண்ணை இயந்திரங்கள் வாங்குவது எப்படி, அவற்றை எவ்வாறு வாடகைக்கு வழங்கி குழுவுக்கு வருமானம் ஈட்டலாம், உழவர் உற்பத்தியாளர் குழுவிலிருந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் எவ்வாறு தொடங்குவது, வங்கியில் இருந்து கடன் பெறுவது குறித்து பேசினார். கூட்டு பண்ணைய குழுக்கள் பராமரிக்கும் பதிவேடு, அவற்றை நிர்வகிக்கும் முறை குறித்து பாபநாசம் வட்டார அட்மா திட்ட தொழிற்நுட்ப மேலாளர் சிவரஞ்சனி விளக்கம் அளித்தார். பயிற்சியில் கணபதி அக்ரஹாரம், தேவன்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கணபதி அக்ரஹாரம் உதவி வேளாண் அலுவலர் ஆறுமுகம், அட்மா திட்ட உதவி தொழிற்நுட்ப மேலாளர்கள் பிரியா, ரஞ்சனி செய்திருந்தனர்.

Tags : farm team ,
× RELATED மக்காச்சோளப் பயிரில் படைப்புழு...