×

காட்பாடி பிரம்மபுரத்தில் பொதுமக்கள் கடும் அதிருப்தி

வேலூர், ஜன.1: காட்பாடி பிரம்மபுரம் ஏரியின் கரை பலவீனமான நிலையில் ஏரி தூர்வாரப்படாததால் சமூகவிரோதிகள் ஏரி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றி உள்ளனர். இது அந்த பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இயற்கையின் சமசீரற்ற போக்கு காரணமாக தமிழகத்தில் ஒரு ஆண்டு மழையின்றி கடும் வறட்சியாகவும், மற்றொரு ஆண்டு தொடர்மழையும் கிடைக்கிறது. இதுபோன்ற இயற்கையின் போக்குக்கு ஏற்ப நீர்மேலாண்மை திட்டங்கள் உருப்படியாக மேற்கொள்ளப்படாததால் மழையால் நீராதாரம் கிடைக்கும் காலங்களில் அவற்றை சேமிக்க முடியாமல் கையை பிசையும் நிலைக்கு தமிழகம் ஆளாக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு சமீபத்தில் இரண்டு புயல்கள் மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் கிடைத்த நீராதாரம் முழுமையாக சேமிக்கப்படும் நிலையில் ஏரிகளும், குளங்களும் சரியாக தூர்வாரப்படாமல் தண்ணீர் பெருமளவு வீணாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. காட்பாடி பிரம்மபுரம் ஏரியை நம்பி பிரம்மபுரம், தாங்கல், சேவூர், கோரந்தாங்கல் போன்ற கிராமங்களின் கிணறுகளும், ஆழ்துளை கிணறுகளும் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் கிடைத்த நீரை முழுமையாக சேமிக்கும் வகையில் பிரம்மபுரம் ஏரி தூர்வாரப்படவில்லை. இவ்வாறு தூர்வாரப்படாத ஏரி தற்போது முழுமையாக நிரம்பி அந்த நீர் அப்படியே வீணாக வெளியேறி வருகிறது. இதுஒருபுறம் என்றால் சமூக விரோதிகள் சிலர் ஏரிக்கரையை உடைத்து கால்வாய் போல வெட்டி நீைர வெளியேற்றியுள்ளனர்.

இதுகுறித்து பிரம்மபுரம் கிராம மக்கள் கூறுகையில், ‘தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளங்களை தூர்வார பல கோடிகளை செலவு செய்து வருவதாக கூறுகிறது. ஆனால் பிரம்மபுரம் ஏரியை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குடிமராமத்து திட்டத்தில் பிரம்மபுரம் ஏரியை இணைத்து பணியை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீரை முழுமையாக சேமிக்க முடியும். கரை உடைவதற்கும், ஏரி அரைகுறையாக நிரம்பி வழியும் நீரை கரையை உடைத்து வெளியேற்ற வேண்டிய அவசியமும் இல்லை. இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது அருகில் உள்ள அனைத்து கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்’ என்றனர்.

Tags :
× RELATED டாக்டரின் போலி கையெழுத்து, சீலுடன்...