×

மாநகராட்சி பகுதிகளில் சாலையோரம் பலி வாங்க காத்திருக்கும் மின் கேபிள்

ஈரோடு, ஜன.1: ஈரோட்டில் சாலையோரம் மக்களை பலி வாங்க காத்திருந்த பாதாள மின் கேபிளில் மின்சாரம் தாக்கி தெரு நாய் துடிதுடித்து பலியானது. இதற்கு மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் கடந்த சில ஆண்டுக்கு முன் பாதாள மின் கேபிள் திட்டப்பணி துவங்கப்பட்டது. இதற்காக, சாலைகள் தோண்டப்பட்டு, மின் கேபிள்கள் பதிக்கப்பட்டு, சாலையோரம் இருந்த மின் கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதில், ஈரோடு கந்தசாமி வீதியில் உள்ள கோகுலக்கண்ணன் மொத்த மளிகை கடைக்கு, பாதாள மின் கேபிள் திட்டத்தில் இணைப்பு கொடுத்து விட்டு, மீதி கேபிள்களை மின்வாரியத்தினர் முறையாக ஒழுங்குப்படுத்தாமல் சாலையிலேயே போட்டு வைத்திருந்தனர். அந்த மின் கேபிளில் மின்சாரம் பாய்ந்துள்ளது. நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், கந்தசாமி வீதியில் கீழே போடப்பட்டிருந்த மின் கேபிள் அருகே தண்ணீர் தேங்கி, மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில், மளிகை கடை உரிமையாளர் விமல் (35) நேற்று காலை காரில் வந்து இறங்கி கடைக்குள் செல்ல முயன்றார். அப்போது, அங்கு சாலையோரம் சுற்றிதிரிந்த தெரு நாய் ஒன்று திடீரென விமல் அருகே ஓடி வந்து, பாதாள மின் கேபிள் ஓயரை மிதித்ததால் மின்சாரம் தாக்கி நாய் பலியானது. இதுகுறித்து விமல் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த மின்வாரியத்தினர் அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து, பாதாள மின்கேபிளை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags : corporation areas ,
× RELATED பெங்களூரு உள்ளிட்ட 11 மாநகராட்சி...