×

பெங்களூரு உள்ளிட்ட 11 மாநகராட்சி பகுதியில் வருடந்தோறும் 3% சொத்து வரி உயர்வு சட்டத்திருத்தம் நிறைவேற்றம்: மேலவையில் காங்கிரஸ் வெளிநடப்பு

பெங்களூரு: பெங்களூரு உள்ளிட்ட 11 மாநகராட்சி பகுதியில் வருடந்தோறும் 3 சதவீதம் சொத்து வரி உயரும் வகையில் சட்டத்திருத்தம் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு இடையே மேலவையில் நிறைவேறியது. ஆளுங்கட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். கர்நாடக பேரவையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் நகர வளர்ச்சி துறை சார்பில் சொத்து வரி உயர்வுக்கு வகை செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மேலவையில் அந்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் நாகராஜ், சொத்து வரி செலுத்தியவர்களுக்கு 5 சதவீதம் வரி விலக்கு அளிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அது போல் நகர வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி பசவராஜ் சொத்து வரி உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்தார். இந்த இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும், குறிப்பாக வருடந்தோறும் சொத்து வரி 3 சதவீதம் உயர்த்தப்பட்டால் சாதாரண மக்களின் மீது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் பிகே ஹரிபிரசாத், பிஆர் ரமேஷ் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர். அதே நேரம் காங்கிரஸ் உறுப்பினர்களின் வாதத்திற்கு அமைச்சர்கள் பைரதி பசவராஜ், எம்டிபி நாகராஜ் மற்றும் அரவிந்த் லிம்பாவளி ஆகியோர் விளக்கம் அளித்தனர். அமைச்சர்களின்  விளக்கத்தை காங்கிரஸ் மற்றும் மஜத உறுப்பினர்கள் ஏற்கவில்லை. அத்துடன் மசோதாவை வாபஸ் பெறவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியதால் அவையில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே சொத்து வரி செலுத்திய நபர்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி அளிப்பது மற்றும் வருடந்தோறும் 3 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு வழிவகை செய்யும் சட்ட மசோதா ஆகிய இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குரல் வாக்கு கெடுப்பு நடத்த துணை தலைவர் பிரானேஷ் உத்தரவிட்டார். அப்போது காங்கிரசார் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு குரல் எழுப்பினாலும்  மேலவையில் சட்ட மசோதா நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதே இதை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post பெங்களூரு உள்ளிட்ட 11 மாநகராட்சி பகுதியில் வருடந்தோறும் 3% சொத்து வரி உயர்வு சட்டத்திருத்தம் நிறைவேற்றம்: மேலவையில் காங்கிரஸ் வெளிநடப்பு appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Congress ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்