×

சமீபத்தில் புனரமைக்கப்பட்ட நிலையில் இரவோடு இரவாக குப்பையை கொட்டி ஏரியை ஆக்கிரமிக்க முயன்ற ஆசாமிகள்: ˜ நடவடிக்கை கோரி மக்கள் போராட்டம் ˜ அதிகாரிகள் உடந்தை என குற்றச்சாட்டு

பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தனியார் பல்கலைக்கழகம் அருகே புத்தேரி என்ற ஏரி, சாலையின் இருபுறமும் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி தூர்ந்து காணப்பட்ட இந்த ஏரியை தூர்வாரி  சீரமைக்க வேண்டும், என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், கடந்த சில மாதங்களுக்கு முன், ரேடியல் சாலையின் தெற்கு பகுதியில் உள்ள ஏரியை ₹30 லட்சம் செலவில் பல்லாவரம் நகராட்சி நிர்வாகம் புனரமைத்தது. வடக்கு பகுதியில் உள்ள ஏரியை, பல்லாவரத்தை சேர்ந்த பசுமை பெருக  சுத்தம் செய் என்ற அமைப்பு, பொதுமக்கள் பங்களிப்புடன் தூர்வாரி கரைகளை பலப்படுத்தியது.  சமீபத்தில் பெய்த மழையால் புத்தேரியின் இருபுறமும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வடக்கு பகுதியில் உள்ள ஏரியில், மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக லாரிகளில் குப்பை கழிவுகளை கொண்டு  வந்து கொட்டி சென்றுள்ளனர். இதனால், ஏரி முழுவதும் குப்பை பரவி, தண்ணீர் மாசடைந்தது.

நேற்று காலை அவ்வழியே நடைபயிற்சி சென்ற பொதுமக்கள், ஏரியில் குப்பை கொட்டப்பட்டதை அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து அங்கு ஏராளமானோர் திரண்டு, ஏரியில் குப்பை கொட்டிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி ஆர்பாட்டம்  நடத்தினர்.
போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘‘ஏரிக்கு அருகிலேயே காவல் உதவி மையம் உள்ளது. சிசிடிவி கேமரா உள்ளது. அப்படி இருந்தும். மர்ம நபர்கள் துணிச்சலுடன் ஏரியில் குப்பை கழிவுகளை  கொட்டியுள்ளனர். எனவே, போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் துணையுடன்தான் இச்செயல் நடந்துள்ளது,’’ என குற்றம்சாட்டினர். ஆனாலும்கூட போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்யாமல் அலட்சிய போக்குடன் செயல்பட்டனர். இதனால், ஆத்திரமடைந்த சமூக ஆர்வலர்கள், போலீசாரின் அலட்சியத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். இதனால்,  அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், ஏரியில் கொட்டப்பட்ட குப்பை கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ரேடியல் சாலையின் வடக்கு பகுதியில் உள்ள ஏரி பராமரிப்பின்றி தூர்ந்து காணப்பட்டதால், இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சித்து வந்தனர். ஆனால், சமீபத்தில் தூர்வாரி  சீரமைக்கப்பட்டதால் ஆக்கிரமிப்பாளர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. இந்நிலையில், மீண்டும் இந்த எப்படியாவது ஆக்கிரமிக்க வேண்டும் என்ற நோக்கில், ஏரியில் குப்பை கழிவுகளை கொட்டியுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Assamese ,lake ,area ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு