×

பல அணிகள் வந்தாலும் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி தான் ஆட்சிக்கு வரும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி உறுதி

புதுச்சேரி, நவ. 1: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 41வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கட்சி அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திராகாந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, சீனியர் துணை தலைவர் தேவதாஸ், ராஜ்பவன் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் மருதுபாண்டியன், மகளிர் காங்கிரஸ் தலைவி நிஷா, வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ், கதிர்காமம் பொறுப்பாளர் ராஜகுமார் மற்றும் காங்கிரசார் கலந்து கொண்டனர்.

முன்னதாக, கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி பேசும்போது, புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெறவுள்ளது. இதில் நாம், விழிப்புடன் முனைப்பாக இருக்க வேண்டும். திருத்தப்பணியில் நம்மை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளனரா? இறுதி பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ளதா? என பார்க்க வேண்டும். இவ்விஷயத்தில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அப்போது தான் நமது ஓட்டு நம்மிடம் இருக்கும், நமது ஓட்டை நாம் போட முடியும், நாம் ஜெயிக்க முடியும் என்றார்.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், எதிர்க்கட்சி தலைவர்களே பாராட்டும் அளவுக்கு இந்திரா காந்தி, சிறந்த தலைவராக விளங்கினார். மதவாதம், பிரிவினைவாதத்தை வளர்த்ததால் ஆர்எஸ்எஸ்-ஐ படேல் அப்போதே தடை செய்தார். அவருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது ஆர்எஸ்எஸ். ஆனால் இப்போது படேலை ஆர்எஸ்எஸ், பாஜக கொண்டாடுகிறது. தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காகத்தான் மேற்கண்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை நடத்துகின்றனர்.

இந்த 5 மாநிலங்களில் மட்டும் இப்பணியை நடத்தினால் விமர்சனம் வரும் என்பதால் இதனுடன் சேர்த்து 12 மாநிலங்களில் நடத்துகின்றனர். ஓரிடத்தில் கம்ப்யூட்டர் சென்டரில் அமர்ந்து கொண்டு வாக்காளர்களை நீக்குகின்றனர். இதற்காக ஒரு ஓட்டுக்கு ரூ.80 கமிஷன் பெறுகிறார்கள். இதன் பின்னணியில் பாஜக இருக்கிறது. தேர்தல் துறைக்கு தெரியாமல், அனுமதி இல்லாமல் இது நடக்க வாய்ப்பு இல்லை. சிறுபான்மையினர், தலித்துகள் என யாரெல்லாம் தங்களுக்கு ஓட்டு போட மாட்டார்களோ அவர்களை நீக்குகின்றனர். இத்தகைய வாக்கு திருட்டு மூலம் வெற்றிபெற்று தமிழகம், புதுச்சேரியில் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்கள். எனவே, இதில் நாம் முனைப்புடன விழிப்புடன் இருக்க வேண்டும். மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். பிஜேபி பி டீம் தான், ஜேசிஎம் மக்கள் மன்றம்.

சார்லஸ் மார்ட்டினுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர் ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்டு எம்எல்ஏ., கல்யாணசுந்தரம் எம்எல்ஏ ஆகியோரை பாஜக தலைவர் நீக்குவாரா? உங்களால் முடியுமா? சார்லஸ் மார்ட்டினை கொண்டு வந்ததே பாஜக தான். பாஜகவின் பினாமி தான் சார்லஸ், பி டீம். புதுச்சேரியில் பல அணிகள் வந்தாலும் இந்தியா கூட்டணி தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கு்ம. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை தரப்படும். பீகார் உள்ளிட்ட நாடு முழுவதும் மாற்றம் வரும் என்றார்.

Tags : Former ,Chief Minister ,Narayanasamy ,Bharatiya Janata Party ,Puducherry ,Indira Gandhi ,Puducherry State Congress Party ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா