புதுச்சேரி, நவ. 1: புதுச்சேரி வெங்கடா நகர் பகுதியை சேர்ந்தவர் நிவாசன். இவர், அதே பகுதியில் சொந்தமாக சோளம், கேழ்வரகு உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 2024ம் ஆண்டு நிவாசனை முதலியார்பேட்டை டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் புவனேஸ்வர், அவரது மனைவி சுபத்ரா மற்றும் இடைத்தரகர் செல்வம் ஆகியோர் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். பின்னர், அவர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்த சோளம் விற்பனை செய்யும் வியாபாரிகளை எங்களுக்கு தெரியும், அவர்களிடம் இருந்து 2500 மெட்ரிக் டன் மக்காச்சோளம் குறைந்த விலையில் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி நிவாசன் ரூ.2.44 கோடி வழங்கியுள்ளார். பின்னர், அவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு சோளத்தை வாங்கி கொடுக்கவில்லை.
பிறகு, ஆர்டர் செய்த மக்காச்சோளம் வராததால் சந்தேகமடைந்த நிவாசன், டிஜிட்டல் அக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, அதுபோன்ற நிறுவனம் இல்லை என்பது நிவாசனுக்கு தெரியவந்தது. அதன்பிறகே அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். பின்னர், இச்சம்பவம் குறித்து நிவாசன் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பாபுஜி 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தேடி வந்தனர். இந்நிலையில், செல்வம் தென்காசியில் தலைமறைவாக இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், செல்வத்தை நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், தம்பதிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
