×

தண்ணீர் திறப்பு இல்லாததால் ஆறுகளில் இரவு, பகலாக மணல் கொள்ளை

தஞ்சை, டிச. 31: தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் தண்ணீர் திறப்பு இல்லாததால் இரவு, பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுக்காமல் அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதாக விவசாயிகள், மக்கள் குற்றம் சட்டியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பருவமழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது காவிரி, வெண்ணாறு மற்றும் கிளை ஆறுகளில் தண்ணீர் ஓடவில்லை. இதை பயன்படுத்தி காவல்துறை, பொதுப்பணித்துறையினர் துணையுடன் மணல் கொள்ளை இரவு பகலாக நடந்து வருகிறது. தஞ்சை பள்ளியக்ரஹாரம் வெண்ணாறு, கூடலூர், உதாரமங்கலம், களஞ்சேரி, கள்ளப்பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மாட்டு வண்டிகள், லாரிகளில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. தஞ்சை தாலுகா காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட கூடலூரில் ஆற்றுப்படுகையில் தனியார் குவாரி அமைத்து நள்ளிரவில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு பல லட்சம் மதிப்புள்ள மணல் கொள்ளை நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மணல் கடத்தி வந்த 5 லாரிகளை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். நீண்ட நேரத்துக்கு பிறகு வந்த போலீசார், லாரிகளை பிடித்து வழக்குப்பதிவு செய்யாமல் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை விடுவித்து விட்டதாக இப்பகுதி மக்கள் புகார் செய்கின்றனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தஞ்சை கீழராஜவீதியில் நள்ளிரவில் லாரிகள் மூலம் கடத்தி வரப்பட்ட மணல் சாலையோரங்களில் இறக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட மேற்கு காவல் நிலைய போலீசார் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தஞ்சை மாவட்டத்தில் அரசு மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டதால் தனியார் படுகைகளில் சட்டத்துக்கு புறம்பாக மணல் கொள்ளை நாள்தோறும் முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் துணையுடன் நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
தற்போது மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்கனவே ரூ.20 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட ஒரு லோடு மணல் தற்போது ரூ.50 ஆயிரம் வரை விலை போகிறது. இதனால் மணல் கொள்ளையில் தினமும் பல லட்சம் வருவதால் மணல் கொள்ளையர்கள் நல்ல பணப்புழக்கத்தில் உள்ளனர். இதை அதிகாரிகள் பயன்படுத்தி கொண்டு மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருப்பதை தடுக்க வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தினர்.

Tags : rivers ,water opening ,
× RELATED தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்...