மதுரை: கிட்னி முறைகேடு வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி நடந்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் ஈடுபட்டுள்ள பல ஏழைத் தொழிலாளர்கள் சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் நிதிப்போராட்டத்தை அறிந்த இடைத்தரகர்கள், சிறுநீரக தானத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை வழங்கி அவர்களை தயார் செய்கின்றனர். இது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994ஐ முற்றிலும் மீறுகிறது. இதேபோல் திருச்சி, பெரம்பலூரிலும் குற்றச்சாட்டு உள்ளது. இங்கு நடந்த மோசடி குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்திடும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா, ஐபிஎஸ் அதிகாரிகள் நிஷா, சிலம்பரசன், கார்த்திகேயன் மற்றும் மதுரை எஸ்பி அரவிந்த் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்த நீதிமன்றம், நாமக்கல் கிட்னி விற்பனை குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அஜ்மல் கான் ஆஜராகி, விசாரணை குறித்து அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்து, இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மனுதாரர் தரப்பில் எப்ஐஆர் நகலை வழங்குமாறு உத்தரவிட வேண்டுமென வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் எப்ஐஆர் நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை நவ. 11க்கு தள்ளி வைத்தனர்.
