மானாமதுரை, அக். 29: பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் வாராந்திர ரயிலில் கடத்தி வரப்பட்ட 14 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை மானாமதுரை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் ரயில்நிலையத்தில் இருந்து கடந்த 25ம் தேதி மாலை 5.55 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு (வண்டி எண்-20498) வாராந்திர ரயில் புறப்பட்டு வந்தது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு 8.34 மணி அளவில் மானாமதுரை ரயில்நிலையத்தின் 3வது நடைமேடைக்கு வந்தது. மானாமதுரை ரயில்வே காவல்நிலைய எஸ்.ஐ தனுஷ்கோடி, துரை, தலைமைக்காவலர் செல்வம், மணிகண்டன் ஆகியோர் வழக்கமாக பெட்டிகளை சோதனை செய்தனர். அப்போது எஸ்-1 பெட்டி கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த சாக்குப் பையில் சுமார் 14 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இது குறித்து பயணிகளிடம் விசாரித்தபோது, யாரும் உரிமை கோரவில்லை.
இதையடுத்து குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், அவைகளை சிவகங்கை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் வசம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
