வேலூர், அக்.29: குடியாத்தம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த, வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் மகிளா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா மேல்முட்டுக்கூர் அடுத்த கல்மடகு கிராமத்தை சேர்ந்தவர் தேன் திவாகர்(27). இவர் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் அங்கு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரை குடியாத்தம் அழைத்து வந்துள்ளார்.
சிறுமி தனக்கு நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தார். இதனிடையே சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் திவாகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பாக தேன் திவாகரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் மகிளா சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் விக்னேஸ்வரி ஆஜராகி வாதாடினார். நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி கோகுலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட திவாகருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
