×

ஜீவ காருண்யம் என்றால் என்ன?

?குடியிருக்கும் வீட்டில் நாவல்பழ மரம் வளர்க்கக் கூடாது என்று சொல்கிறார்களே, ஏன்?
– பா.பாலசுப்ரமணியன், தூத்துக்குடி.

நாவல் மரம் என்பது மருத்துவக் குணங்கள் அதிகம் கொண்டது என்றாலும், அதனை வீட்டில் வளர்ப்பதில்லை. பண்ணைத் தோட்டங்கள், நிலங்கள், வயல்வெளிகளில் வளர்த்தார்கள். அது அளவில் பெரியது என்பதாலும், வளர்வதற்கு அதிகப்படியான இடம் தேவை என்பதாலும், அந்த மரமானது அதிகப்படியான குளிர்ச்சியைத் தருவது என்பதால், அதனைத் தேடி நிறைய கருவண்டுகள் வருவதோடு, கருநாகங்களும் குடிகொள்ளும் என்பதாலும், நாவல்பழ மரங்களை வீட்டில் வளர்ப்பதில்லை.

? ஜீவ காருண்யம் என்றால் என்ன?
– எஸ்.தியாகராஜன், சென்னை.

உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலே ஜீவ காருண்யம் என்று அழைக்கப்படுகிறது. ஜீவன் என்றால் உயிர், காருண்யம் என்றால் கருணை. மனிதர்கள் தங்களைப் போலவே மற்ற ஜீவராசி களையும் அதாவது அனைத்து உயிரினங்களிடத்திலும் கருணையுடன் கூடிய அன்பினை செலுத்தவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துவதே ஜீவ காருண்யம் என்பதாகும்.

?ஜாதகப் பொருத்தம் உள்ளவர்கள் திருமணம் செய்துகொண்டால், வாழ்க்கையில் எந்த பிரச்னையும் வராதா?
– கே.எம்.ஸ்வீட் முருகன், கிருஷ்ணகிரி.

பிரச்னை இல்லாத வாழ்க்கை என்பது ஏது? எல்லோருடைய வாழ்க்கையிலும் பிரச்னை என்பது வந்துகொண்டுதான் இருக்கும். அதற்கும் ஜாதகப் பொருத்தத் திற்கும் சம்பந்தம் இல்லை. அவரவர் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணை என்பது எப்படி அமையும் என்ற விதி எழுதப்பட்டிருக்கிறதோ, அப்படித்தான் மணவாழ்வு அமையப் போகிறது எனும்போது, எதற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டும்? திருமணம் செய்யப்போகும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் தனது துணை என்பது இதுபோன்ற குணநலனைத்தான் கொண்டிருப்பார் என்பதை அவரவர் ஜாதகத்தைக் கொண்டே அறிந்துகொள்ள இயலும். தனக்கு திருமணத்திற்கான நேரம் என்பது வந்துவிட்டதா என்பதை மட்டும் தெரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயல்பட்டாலே போதுமானது. விதியை மாற்ற யாராலும் இயலாது. மணமக்கள் இருவரும் பார்த்துக்கொள்ளும்போது மனப்பொருத்தம் இருக்கிறதா என்பதை மட்டும் கவனத்தில்கொண்டு திருமணம் செய்யலாம். அவர்கள் இருவர் ஜாதகங்களும் பொருந்தியிருந்தால் மட்டுமே மனப்பொருத்தம் என்பதும் வந்து சேரும். மனப்பொருத்தம் இல்லை என்றால், ஜாதகங்களும் பொருந்தவில்லை என்றுதான் பொருள். ஜாதகப் பொருத்தம் பார்ப்பதைவிட மனப்பொருத்தம் பார்த்து திருமணத்தை நடத்துவதும் தனக்குரிய வாழ்க்கைத்துணையின் குணநலன் என்பது இப்படித்தான் இருக்கும் என்பதை தனது ஜாதகத்தைப் பார்த்து முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு சமாளித்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவதும் மட்டுமே வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான வழியாக இருக்கும்.

?திதி தர்ப்பணம் போன்ற தினங் களில் முதலில் எந்த பூஜையைச் செய்ய வேண்டும்?
– விஜயா, பொள்ளாச்சி.

முதலில் முன்னோர்களுக்கான பூஜையைச் செய்துவிட்டுப் பிறகுதான் தெய்வத்தின் பூஜையைச் செய்ய வேண்டும். திருவள்ளுவர் இதுகுறித்து ஒரு அழகான குறட்பா சொல்லி இருக்கிறார்
“தென்புலத்தார் தெய்வம் விருந் தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.’’
என்ற திருக்குறள், இல்லறத்தாரின் கடமைகளாக முன்னோர்கள், தெய்வம், விருந்தினர், உறவினர் மற்றும் குடும்பம் என ஐந்திடத்தும் அறநெறி தவறாமல் காத்து நடக்க வேண்டும் என்கிறது. இதில் உள்ள வரிசையைக் கவனித்தால் முதலில் தென்புலத்தார் அதற்குப் பிறகு தெய்வம் என்றுதான் வருகிறது. பலரும் அப்படித்தான் செய்கிறார்கள். அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு, பிறகு வீட்டில் பூஜை செய்து படைத்துவிட்டு சாப்பிடுகின்றார்கள். எனவே முதல் பூஜை முன்னோர்களுக்கே!

?அம்மை அப்பனைச் சுற்றுவது உலகைச் சுற்றுவதற்கு சமம் என்பது ஏன்?
– பி.கனகராஜ், மதுரை.

அம்மை அப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மை அப்பன் என்ற பதிலும் அங்கேயே இடம்பிடித்திருக்கிறதே. அம்மை அப்பனுக்குள்தான் இந்த உலகமே அடங்கியிருக்கிறது என்ற உயர்ந்த தத்துவத்தை உள்ளடக்கியதுதான் இந்த சொற்றொடர். வேதாங்க ஜோதிடம், சூரியனை பித்ருகாரகன் அதாவது அப்பன் என்றும் அதற்கு உரிய பிரத்யதிதேவதை ஆக பசுபதி எனும் பரமேஸ்வரனையும் சந்திரனை மாத்ருகாரகன் அதாவது அம்மை என்றும் அதற்குரிய பிரத்யதிதேவதை ஆக கௌரி எனும் பார்வதி அன்னையையும் குறிப்பிடுகிறது. அறிவியல் ரீதியாக நோக்கினால் சந்திரனை தனது துணைக்கோளாகக் கொண்டு அந்த சூரியனை இந்த பூமியானது சுற்றுகிறது. பூமியில் வாழும் நாமும் சேர்ந்து சுற்றுவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். சூரியனை மையமாகக் கொண்டு இந்த அண்டத்தையே சுற்றி வந்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் அம்மை அப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மை அப்பன் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

?மனிதன் எதை இழக்கக்கூடாது?
– சொக்கநாதன், வேலூர்.

நிகழ் காலத்தை இழக்கக்கூடாது. “BE IN PRESENT’’ என்பார்கள். ஆனால், கடந்த கால துக்கங்களிலும் எதிர்கால கற்பனைகளிலும் நிகழ்காலத்தை இழந்து கொண்டிருக்கிறோம்.

?நவகிரகங்கள் வீதி உலா வருவதுண்டா?
– காவேரி கோபாலகிருஷ்ணன், தர்மபுரி.

பொதுவாக வருவதில்லை.. ஆனால், இதிலும் ஒரு தலத்தில் விதிவிலக்கு உண்டு. அந்த தலம் எது தெரியுமா? கும்பகோணத்துக்கு அருகிலுள்ள சூரியனார் கோயில். தமிழகத்தில் சூரியனுக்காகத்தனிக் கோயில் அமைந்துள்ள ஒரே இடம். இங்கு மட்டுமே.. எல்லா நவகிரக உற்சவ மூர்த்திகளும் தைமாத பிரம்மோற்சவத்தில் திருவீதி உலா வரும். இந்த ஆலயத்தில் உள்ள நவகிரகங்கள் சாந்த சொரூபிகளாக அடியவர்களுக்கு அருள் வழங்கும் நிலையில், அபய ஹஸ்தத்துடன் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. நவக்கிரகங்கள் எல்லாவற்றுக்கும் பஞ்சலோக விக்ரகங்கள் உள்ள திருத்தலம். இந்தத் தலத்தில் மட்டுமே சூரியனுக்குத் திருக் கல்யாணம் நடக்கும். இதைத் தரிசிப்பதால் திருமணத் தடைகள் அகலும்.

உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி அனுப்பி வைக்கவும். ஏன் எதற்கு எப்படி..? தினகரன், ராசி பலன்கள் தபால் பை எண். 2908, மயிலாப்பூர், சென்னை – 600 004.

Tags : Pa. Balasubramanian ,Thoothukudi ,
× RELATED கிறிஸ்துமஸை வரவேற்போம்!