×

இந்திய நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும், காங்கிரசும் ஒரே பாதையில் பயணிக்கின்றன: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: நாட்டின் ஒற்றுமைக்காக திமுகவும்-காங்கிரசும் ஒரே அணியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் முன்னாள் எம்எல்ஏ சொக்கரின் பேரனும், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் மகனுமான சிவராஜா ராஜா-எஸ்.சாலுபாரதி திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

1989ம் ஆண்டில் இருந்து கலைஞரோடு நெருங்கிப் பழகி அவரிடம் பாசத்தோடு, அன்போடு, பண்போடு இருந்து பழகியவர் சொக்கர். ஒருமுறை சட்டமன்றத்தில் அன்றைக்கு அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ராமகிருஷ்ணன் என்ற ஒரு அமைச்சரின் மானியக் கோரிக்கையை விவாதித்து அதற்கு பதில் சொல்கின்றபோது, அவர் பேசி முடித்ததற்கு பிறகு சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதை படிக்கின்ற நேரத்தில், படித்து முடித்ததை மறுபடியும் படிக்க ஆரம்பித்தார். அறிவிப்பின் பட்டியலை தட்டச்சு செய்தபோது, ஜெராக்ஸ் காப்பி எடுத்திருந்தார்கள். அந்த ஜெராக்ஸ் காப்பியையும் அவரிடம் வைத்து கொடுத்துவிட்டார்கள். அது அவருக்கு தெரியாது. அதனால், பதற்றத்தோடு, அவர் படிக்கின்றபோது மறுபடியும் அதையே படிக்க ஆரம்பித்தார்.  உடனே சொக்கர் சட்டமன்றத்தில் பாயின்ட் ஆப் ஆர்டர் என்று சொல்லிவிட்டு, பேரவை தலைவரே, அமைச்சர் படித்ததையே மறுபடியும் படிக்கின்றார் என்று சட்டமன்றத்தில் சொன்னார்.

உடனே முதல்வராக இருந்த கலைஞர் எழுந்து நானும் கவனித்தேன்-அவர் ஏன் படித்தார் என்றால், அவர் படிக்கின்றபோது சொக்கர் கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். ஒருவேளை அயர்ந்து தூங்கிவிட்டாரோ என்று கருதி ஒருவேளை மறுபடியும் படித்திருப்பார். எனவே தவறாக நினைத்துவிட வேண்டாம் என்று சொல்லி, அதை சமாளித்து, ஒரு நகைச்சுவையான சம்பவத்தை அங்கு ஏற்படுத்தினார்.

திமுகவும், காங்கிரஸ் பேரியக்கமும் ஒரு காலத்தில், வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்றைக்கு நாட்டின் நன்மைக்காகவும், நாட்டின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், அதையும் தாண்டி இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஒரே அணியில்-அதே சிந்தனையுடன் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு இயக்கங்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கின்ற இந்தப் புரிதலும்-கொள்கை உறவும் நிச்சயம் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் காப்பாற்றும். அது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.

* ‘அருமை சகோதரர் ராகுல்’

ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் என் மீது காட்டுகின்ற அன்பை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பேசுகின்ற போது, விளிக்கின்ற போது யாரையும் நான் சகோதரர் என்று சொன்னது கிடையாது. ஆனால், ராகுல் காந்தியை பற்றி மட்டும் நான் விளிக்கின்றபோது அருமை சகோதரர் என்று சொல்வதுண்டு. காரணம், அவர் என்னை எப்போது பார்த்தாலும், என்னிடம் போனில் பேசும்போதும் மை டியர் பிரதர் என்று தான் சொல்வார். இந்த அளவுக்கு அரசியல் நட்பு மட்டுமல்ல; கொள்கை உறவாகவும் வலுப்பெற்று, இந்தியாவின் குரலாக இன்றைக்கு எதிரொலித்துக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். இந்த உணர்வைதான் நாங்கள் எல்லோரிடமும் எதிர்பார்க்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

 

Tags : DMK ,Congress ,India ,Chief Minister ,MK Stalin ,Chennai ,MLA ,Chokar ,Virudhunagar East District Congress ,President ,Raja… ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!