×

வாக்கு எண்ணும் மையமான சட்டக்கல்லூரியை கலெக்டர் ஆய்வு: முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்


வேலூர், டிச.31: வேலூர் மாவட்டத்தில் புதிதாக அமையுள்ள வாக்கு எண்ணும் மையமான சட்டக்கல்லூரி முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் ஆய்வு செய்தார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற ேதர்தலை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக 1,500 வாக்காளர்களை கொண்ட ஒரு வாக்குச்சாவடிக்கு பதிலாக 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற விகிதமாக மாற்றி தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் தற்போது வரை 1,301 வாக்குச்சாவடிகள் இருந்தன. தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கூடுதலாக 527 புதிய வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,828 வாக்குச்சாவடி மையங்கள் அமைய உள்ளது. வேலூர் மாவட்டத்தில் பதிவாகும் மொத்த வாக்குகளையும் தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை கொரோனா பிரச்னை காரணமாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு வாக்கு எண்ணும் மையமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியும், அணைக்கட்டு தொகுதிக்கு ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியிலும், காட்பாடி தொகுதியில் பதிவாகும் வாக்குகளை சட்டக்கல்லூரியிலும், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் தொகுதியில் பதிவாகும் வாக்குகளை குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ண முடிவு செய்யப்பட்டு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையமான புதிதாக அமையுள்ள காட்பாடி சட்டக்கல்லூரியை கலெக்டர் சண்முகசுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறை, வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது டிஆர்ஓ பார்த்தீபன், உதவி கலெக்டர் தினகரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பழனி, தாசில்தார் பாலமுருகன், டிஎஸ்பி ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கொரோனா பரவல் காரணமாக கூடுதல் வாக்கு எண்ணும் மையங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். புதிய வாக்கு எண்ணும் மையத்தின் அனுமதிக்காக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அனுமதி கிடைத்தால் மட்டுமே புதிதாக அமையுள்ள வாக்கு எண்ணும் மையங்கள் பயன்பாட்டிற்கு வரும். அனுமதி கிடைக்கவிட்டால், பழைய வாக்கு எண்ணும் மையத்திலேயே வாக்கு எண்ணிக்கை நடைபெறும்’ என்றனர்.





Tags : Collector ,Central Law College ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...