*குமரி வாலிபர்கள் 6 பேர் கைது
*விலை உயர்ந்த பைக்குகளும் பறிமுதல்
*தீப்பொறி பறக்க ஹாரன்களை அலற விட்டு மின்னல் வேகத்தில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அச்சம்
நெல்லை : வள்ளியூரில் பைக் ரேஸில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்ததோடு விலை உயர்ந்த 6 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
நெல்லை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மாலை மற்றும் இரவு நேரத்தில் சூதாட்டம் போன்று பந்தயத்திற்கு பணம் கட்டி திடீர், திடீரென பைக் ரேஸ் நடைபெறுகிறது.
எந்தவித ஸ்பீட் பிரேக் இல்லாத சுமார் 10 கி.மீ நீளம் கொண்ட சாலையை தான் பைக் ரேஸ் நடத்துவதற்கு தேர்வு செய்கின்றனர். இந்த பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தான் ஈடுகின்றனர்.
அதுமட்டுமின்றி சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்களின் வாரிசுகள் ஈடுபடுகின்றனர். இருவர் செல்லும் ரேஸ், ஒருவர் மட்டும் தனித்தனியாக செல்லும் ரேஸ் நடக்கிறது. இந்த சூதாட்ட ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் ஹாரன்களை அலற விட்டப்படி மின்னல் வேகத்தில் சாலையில் பறக்கின்றனர். பைக் அதிவேகமாக சாலையில் செல்லும் போது சென்டர் ஸ்டாண்டை சாலையில் படும் படி அழுத்தி தீப்பொறி பறக்க விடுகின்றனர். மாலை மற்றும் இரவு நேரத்தில் நடக்கும் இந்த பைக் ரேஸால் தேசிய நெடுஞ்சாலை செல்லும் வாகன ஓட்டிகளை பதற வைக்கிறது.
பணத்திற்கு ஆசைப்பட்டும், தங்களது காதலியை கவர்வதற்காகவும், தன்னை திறமையானவன் என்று மற்றவர்கள் கூற வேண்டும் என்பது போன்ற அற்ப ஆசைகளுக்கு விலை உயர்ந்த ரேஸ் பைக்கில் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழவூரில் இளஞ்சிறார் கார் ஓட்டிய விபத்தில் தாத்தா, பேத்தி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி வள்ளியூர் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலைத்துலையில் வாலிபர்கள் பைக் ரேஸ் நடப்பதாக வள்ளியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், நாகர்கோவிலில் இருந்து நெல்லை வரை சென்றுவிட்டு அதன்பிறகு நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற போது வள்ளியூர் புறவழிச்சாலையில் விலை உயர்ந்த 6 பைக்குகளையும் மறித்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் பைக் ரேஸில் ஈடுபட்டது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள் 6பேர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து வாலிபர்கள் 6 பேரை கைது செய்த போலீசார் பைக் ரேஸில் பயன்படுத்தப்பட்ட விலை உயர்ந்த 6 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் பைக் ரேஸில் ஈடுபட்ட வாலிபர்களின் பெற்றோரையும் வள்ளியூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த போலீசார், பின்னர் 6 பேருக்கு தக்க அறிவுரை கூறியதோடு இனி இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அனுப்பிவைத்தனர்.
இதனிடையே நெல்லை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இதுபோன்று பைக் ரேஸில் ஈடுபடுபவர்களால் அவ்வப்போது விபத்து நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், எனவே பைக் ரேஸில் ஈடுபடுவோர்கள் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
