- டிடீவி
- ஆர் உதயகுமார்
- மதுரை
- தினகரன்
- முன்னாள் அமைச்சர்
- ஜெயலலிதா சபை நிர்வாகிகள்
- மதுரா
- மாஜி அமைச்சர்
- ஆர். ஆ.
- உதயகுமார்
- முத்துராமலிங்க
மதுரை: டிடிவி.தினகரன் காலாவதியான அரசியல்வாதி என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரையில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் கூட்டம் மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது அவர், பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி செலுத்தும் வகையில், ‘ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது’ என்ற தலைப்பில் ரத்த கையெழுத்திட்டு அவரை வரவேற்பதாக தெரிவித்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: டிடிவி.தினகரன் குறித்து பேச வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மீடியா வெளிச்சத்திற்காக அவர், எடப்பாடி குறித்து விமர்சனம் செய்கிறார். மீடியா வெளிச்சம் இல்லையென்றால் தமிழ்நாட்டு மக்கள் அவரை மறந்து விடுவார்கள். போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போல டிடிவி.தினகரனின் பேச்சுக்கள் ஆகாதது, போகாதது போல உள்ளது. அவர் மக்கள் பணிகளை முதலில் செய்யட்டும். பின்னர் எடப்பாடி குறித்து பேசட்டும். டிடிவி.தினகரனுக்கு ஊடக வெளிச்சம் இருப்பதால் போவோர் வருவோரை ஆபாசமான வார்த்தைகளில் பேசுகிறார்.
அவரது பேச்சால் மக்களுக்கு எந்த ஒரு நல்லதும் நடைபெறாது. அவருடைய கதை முடிந்த கதை, மருந்துகள் சாப்பிடும்போது, நோய்கள் குணமாகும். காலாவதி மருந்து சாப்பிட்டால் அது விஷமாகும். மருந்து வேண்டுமா? விஷம் வேண்டுமா? என மக்கள் முடிவெடுத்து கொள்ள வேண்டும். டி.டி.வி.தினகரன் காலாவதியான அரசியல்வாதியாக உள்ளார். அவரை பற்றி பேசி நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க வேண்டாம்.
இவ்வாறு கூறினார்.
‘யார் காலாவதியானவர் என்று மே மாதம் தெரியும்’ உதயகுமாருக்கு டிடிவி பதிலடி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்ட பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் காலாவதியானவர் என்று சொல்லி இருக்கிறார் என்று கேள்விக்கு, மே மாதத்தில் யாரு காலாவதியானவர் என்று உங்களுக்கு தெரியும். வீரப்பனை போல மறைந்து கேசட்டு விடுபவர் மதுரையை சேர்ந்த தம்பி உதயகுமார். அதிமுகவிற்கு, தவெக தலைவர் விஜய் கூட்டணிக்கு வருவார் என்று எடப்பாடி பழனிச்சாமி தொண்டர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, எடப்பாடி பழனிச்சாமி சென்றால் தவெக-அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு உண்டு என்றார்.
