×

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்கு பணியாற்றியவர்கள் சுற்றுச்சூழல் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 2024ம் ஆண்டிற்கான “சுற்றுச்சூழல் விருதுகள்” வழங்கி கவுரவிப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுகள், சுற்றுச்சூழல் மேலாண்மை விருதுகள், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருது என 4 வகையான விருதுகள் வழங்கப்படுகிறது. மொத்தமாக முதல் பரிசுக்கு 2,00,000, இரண்டாவது பரிசுக்கு 90,000, மூன்றாவது பரிசுக்கு 60,000 பிரித்து வழங்கப்படும்.

விண்ணப்பதாரர் தனிநபராக இருப்பின் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும், சுற்றுச்சூழல் மேலாண்மை (அ) சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவில் விண்ணப்பிக்கக்கூடிய தனிநபர்/நிறுவனம் அறிவிக்கையில் குறிப்பிட்ட கால கட்டத்தில் மேற்கொண்ட களப்பணி மற்றும் அதைச் சார்ந்த பிரசுரங்கள், பத்திரிகை குறிப்புகள், திட்ட அறிக்கைகள், அதனால் ஏற்பட்ட பயன்பாடு, பயனாளிகள்/ பங்கு பெற்றோர் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம்பெற வேண்டும், ஏதேனும் ஒரு பிரிவில் மட்டுமே தனிநபர் / நிறுவனம் விண்ணப்பிக்கலாம். ஆராய்ச்சிக் கட்டுரைகள் தமிழ் (அ) ஆங்கிலத்தில் தரமான ஏடுகளில் பிரசுரிக்கப்பட்டவைகளாக இருக்க வேண்டும், ஆராய்ச்சி கட்டுரை பிரிவின்கீழ் சம்பந்தப்பட்ட தலைப்பில் புத்தமாக வெளியிடப்பட்டிருப்பின் (தமிழிலும் / ஆங்கிலத்திலும்), அந்த புத்தகம் முழுமையாக இணைத்தல் வேண்டும், ஆராய்ச்சி கட்டுரை மற்றும் புத்தகம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து பிரசுரம் செய்தருந்தால், முதல் நபர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்.

விருதுகளுக்காக விண்ணப்பிக்கும் தனிநபர்கள் / நிறுவனங்கள், தமிழ்நாடு விருதுகள்< http://awards.tn.gov.in > இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இணைவழி விண்ணப்பங்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். அஞ்சல், மின்னஞ்சல் அல்லது நேரிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. விண்ணப்பதாரர்கள் < http://awards.tn.gov.in > என்ற இணையதளம் மூலம் அடுத்த மாதம் 14ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விருதுகள் குறித்த மேலும் விவரங்களுக்கு தொலைபேசி 044 -24336421, மின்னஞ்சல் முகவரி -tndoe@nic.in , http://environment.tn.gov.in என்ற வலைதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Department of Environment and Climate Change ,Tamil Nadu government ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...