×

நெல் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்தப்படுமா? செங்கல்பட்டில் ஒன்றிய குழு ஆய்வு: கோவை, நாமக்கல் அரிசி ஆலைகளில் சோதனை

சென்னை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த கோரிக்கை எழுந்துள்ள நிலையில் தமிழகம் வந்த ஒன்றிய குழுவினர் நேற்று செங்கல்பட்டில் ஆய்வு நடத்தினர். மேலும் 2 குழுவினர் கோவை, நாமக்கல் அரிசி ஆலைகளில் சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு விவசாயிகளிடம் எழுந்தது. அதற்கு தீர்வு காண அதிமுக ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குமுறி வந்தனர். இதனால் கஷ்டப்பட்டு கடன் வாங்கி பயிரிட்ட நெற்பயிர்கள் எல்லாம் வீணாகி போனதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சரியான நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்தும், ஏரி, குளங்களில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், எப்போதும் இல்லாத அளவுக்கு நெல் உற்பத்தி 2 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கூடுதல் கொள்முதல் நிலையங்களை அமைத்து தமிழக அரசு நெல் கொள்முதல் செய்து வந்தது. இந்நிலையில், தமிழக அரசு முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. மழைக்கு முன்னர் கொள்முதல் செய்து இருந்தால் மழை நீரில் நனையும் நிலை ஏற்பட்டு இருக்காது.

இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நெல்லின் ஈரப்பதத்தின் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் ஒன்றிய அரசின் அலட்சியமே இந்த பிரச்னைக்கு காரணம் என்றும், இருந்த போதிலும் நெல்லை கொள்முதல் செய்து வருகிறோம்.

உடனடியாக செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். இதுகுறித்து சட்டப் பேரவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய பிரச்னைக்கு அமைச்சர் உரிய விளக்கம் அளித்தார். இதையடுத்து எதிர்க்கட்சியினர் குறிய குற்றச்சாட்டுகள் பொய் என்பது நிரூபணமானது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் நடப்பு 2025-26ம் ஆண்டிற்கான குறுவை பருவ நெல் கொள்முதல் செப்டம்பர் 1ம்தேதி முதல் தொடங்கி 1839 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க தமிழ்நாடு அரசு கடந்த 19ம்தேதி ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி இருந்தது. அதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்து விட்டதாக எடப்பாடி கூறியிருந்தார். ஆனால், அவர் கூறுவது தவறான தகவல், இதுதொடர்பாக ஒன்றிய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி ஆய்வு நடத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசு கோரிக்கை விடுத்ததையடுத்து, 3 குழுக்களை மத்திய உணவுத் துறை அனுப்பியுள்ளது.

அதன்படி, ஒன்றிய குழு நேற்று தமிழகம் வந்துள்ளது. அதில் சென்னை வந்த ஒரு குழு நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டம் கீரப்பாக்கம், திருப்போரூர் வட்டம் ஒரகடம், மதுராந்தகம் வட்டம் படாளம் மற்றும் எல்.என்.புரம், காட்டாங்கொளத்தூர் வட்டம் வில்லியம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா முன்னிலையில் ஆய்வு செய்தது. குழு ஆய்வில் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதை கண்டறிந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு நிறுவனத்தின் மூலம் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் சொர்ணாவாரி பருவத்தில் 72 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். தற்பொழுது, 17 சதவீதத்திற்கு உட்பட்ட ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் நெல்மணிகளில் ஈரப்பதம் அதிகமாக இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் 17லிருந்து 22 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டுமென்று விவசாயிகள் ஒன்றிய குழுவிடம் கோரிக்கை வைத்தனர். இந்த ஆய்வின் போது, முதுநிலை மேலாளர் (தர கட்டுப்பாடு) உமா மகேஸ்வரி, முதுநிலை மண்டல மேலாளர் மாரியப்பன், இணை இயக்குநர் (வேளாண்மை) பிரேம் சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கோவையில் ஆய்வு: ஒன்றிய குழுவை சேர்ந்த அரிசி சேமிப்பு மற்றும் ஆய்வு பிரிவு துணை இயக்குனர் பி.கே சிங், தொழில்நுட்ப அதிகாரி சோபித் ஸ்வாச், ரகேஷ் பராலா, வேலூர் இந்திய உணவு கழக மேலாளர் மோகன் ஆகியோர் கோவை, அன்னூர் பகுதியில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு நேற்று சென்று செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து ஆய்வு நடத்தினர். இதில், கோவை மண்டலத்தில் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட்டு வரும் செறிவூட்டப்பட்ட அரிசியின் தரம், அதில் கலக்கப்படும் தாது பொருட்கள் தொடர்பாக சாம்பிள் எடுத்து ஆய்வு செய்தனர். அரிசி எந்த அளவிற்கு செறிவூட்டம் செய்யப்படுகிறது. மொத்த ஒதுக்கீட்டில் எவ்வளவு அரிசி மக்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது. உரிய அளவின் படி தேவையான தாதுப்பொருட்கள் சேர்க்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கோவை மண்டல தமிழக நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் யாரும் அழைக்கப்படவில்லை. கோவை மண்டலத்தில் வாணிப கழகம், கூட்டுறவு துறை, வழங்கல் பிரிவினர் என யாரும் ஒன்றிய குழு அதிகாரிகள் ஆய்வின் போது இடம் பெறவில்லை.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் அரிசி ஆலையில் இருந்து, செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த ஆலைக்கு ஒன்றிய குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தனுஷ்சர்மா, ராகுல்சர்மா, ஷாகி ஆகியோர் தலைமையில் 5 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மதியம் 1 மணிக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஆலையில் மாதம் எவ்வளவு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது எவ்வளவு இருப்பு உள்ளது?. இம்மாதம் பொது விநியோக திட்டத்திற்கு எவ்வளவு அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து, ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வு மாலை 4.30 மணி வரை நீடித்தது. ஆய்வுக்கு பின், ஆலையில் இருந்து செறிவூட்டப்பட்ட அரிசி மாதிரிகளை சோதனைக்கு எடுத்து சென்றனர். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர்கள் மணிகண்டன், அய்யனார் ஆகியோர் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க தமிழ்நாடு அரசு கடந்த 19ம்தேதி ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி இருந்தது.

* டெல்டாவில் இன்று ஆய்வு
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் நேற்று ஆய்வு செய்ய இருந்தனர். இதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று வண்ணாரப்பேட்டை, பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ராராமுத்திரை கோட்டை ஆகிய 4 இடங்களில் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய இருந்தனர். இந்த ஆய்வு பணிகளை முடித்து பிற்பகலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு செய்ய இருந்தனர். இந்நிலையில் ஒன்றிய குழுவின் ஆய்வு திடீரென ஒத்தி வைக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக ஆய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவை சந்தித்து ஈரப்பதத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்த காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் இன்று ஒன்றிய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu ,Coimbatore ,Namakkal ,Chennai ,Tamil Nadu ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்