சென்னை: அடையாறு ஆற்றின் முகதுவாரத்தை 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதுதொடர்பாக, தமிழக நீர்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் உள்ள மண் படுகைகளை வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பு நீர்வளத்துறையினரால் கடந்த மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தூர்வாரி அகலப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமானதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் அடையாறு முகத்துவாரத்திற்கு திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, நீர்வளத்துறையினரால் 3 பொக்லைன் கொண்டு தூர்வாரப்படும் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணியை கூடுதல் இயந்திரங்களை பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் மண் திட்டுக்களை அகற்றி அடையாறு வெள்ளநீர் விரைவாக வடிய ஆணையிட்டார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலையில் இருந்து படிப்படியாக இயந்திரங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு தற்போது 12 பொக்லைன் இயந்திரங்களும் 4 ஜேசிபி இயந்திரங்களும் ெகாண்டு போர்க்கால அடிப்படையில் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை நீர்வளத்துறை செயலாளர் ஜெயகாந்தன், தலைமைப்பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், திலகம், கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் பார்வையிட்டு, இப்பணிகளின் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணிக்க கண்காணிப்பு பொறியாளர் செல்வகுமார் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் செயற்பொறியாளர் கோ.ரா.ராதாகிருஷ்ணா, உதவி செயற்பொறியாளர் மகேந்திரகுமார், மற்றும் உதவி பொறியாளர் சதீஷ்குமாருடன் கிருஷ்ணா குடிநீர் சிறப்பு திட்ட கோட்டத்தில் இருந்து கூடுதலாக 3 களப்பொறியாளர்களை நியமித்து பணிகளை விரைந்து முடிக்க ஆவண செய்யப்படுகிறது.
