சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இந்த விமானத்தில் 182 பயணிகள், 8 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 190 பேர் இருந்தனர். விமானம் ஓடுபாதையில் ஓடி வானில் பறக்க தொடங்கியது. அப்போது விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதி, இன்ஜின் பகுதிக்குள் புகுந்து கொண்டது. இதையடுத்து பரபரப்படைந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் கொடுத்துவிட்டு, விமானத்தை மேற்கொண்டு இயக்காமல் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினார். அதன்பின்பு அந்த விமானம் விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான, விமானங்கள் நிற்கும் பகுதி தடம் எண் 95க்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
பின்னர், விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தை ஆய்வு செய்தனர். அப்போது விமானத்தின் இயந்திரங்கள் பறவை மோதியதால் சேதம் அடைந்துள்ளது. அதை பழுது பார்த்து சீரமைக்கும் முன்பு, விமானத்தை இயக்க முடியாது என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, 182 பயணிகளும், விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னை நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் பழுதடைந்த விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நடந்தது. அந்த விமானம் நேற்று மாலை 4.30 மணி அளவில், கோலாலம்பூர் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு, மாலை 5.15 மணிக்கு சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு விமானம் புறப்பட்டு சென்றது.இந்த சம்பவம் குறித்து, விரிவான விசாரணை நடத்தும்படி டெல்லியில் உள்ள, விமான பாதுகாப்பு துறையான டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷன் எனப்படும், டிஜிசிஏ அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.
